பத்திரிகை செய்திகளுக்காக அன்றி சமூக பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை இறுக்கமாக முன்னெடுங்கள் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து!
Saturday, April 24th, 2021நாட்டில் கொரோனா தொற்று அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அது தொடர்பில் பல்வேறு வழிகாட்டல்கள் மற்றும் இறுக்கமான நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு நாட்டின் அரச தலைவர் மற்றும் சுகாதார தரப்பினர் அறிவித்திருந்தாலும் யாழ் மாவட்டத்தில் அந்த நடைமுறைகளை அரச, தனியார் நிறுவனங்களோ அன்றி தனியார் கல்வி நிறுவனங்களோ பொதுமக்களோ கண்டுகொள்ளாத நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக யாழ் நகர பகுதிகளெங்கும் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமையில் இருக்கின்ற போதிலும் யாழ் நகரிலுள்ள கடைகளில் பொதுமக்கள் வழமை போன்றே தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் வங்கிகள் வழமைபோன்று தமது செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் காப்புறுதி நிறுனங்களும் சுகாதார கட்டுப்பாடுகளை கண்டுகொள்ளாத வகையில் தமது பணிகளை முன்னெடுத்துவருவதை அவதானிக்க முடிந்தது.
அதேநேரம் பாடசாலைகளுக்கு தொடர்ந்து 3 தினங்கள் விடுமுறையாக உள்ளதால் அவை தொடர்பான தகவல்களை அறிக்கையிட முடியாதபோதிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தமது வழக்கமான கற்பித்தல் செயற்பாடுகளை சாதாரணமாகவே முன்னெடுத்துவருகின்றனர்.
குறிப்பாக முகக்கவசம் அணிந்து கைகளை கழுவிக்கொண்டால் கொரோனகா தொற்று பரவாது என்ற மாயை நிலையை எமது மக்களிடையே தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவற்றை மேற்கொண்டால் எத்தகைய நிகழ்வுகளையோ அன்றி தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளையோ மேற்கொள்ள முடியும் என்ற நிலையும் எமது மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா கொத்தணியை உருவாக்கும் ஏது நிலைக்கு வித்திடுகின்றது.
அதேநேரம் மதுபான விற்பனை நிலையங்களில் ஒன்றுகூடுவதால் கொரோனா தொற்று ஏற்படும் என சுட்டிக்காட்டும் யாழ்ப்பாணத்து சுகாதார தரப்பினரும் அத்துறை சார்ந்தோரும் சமூக ஊடகங்களும் கல்வி நிலையங்களிலும் வியாபார நிலையங்களிலும் வங்கிகளிலும் கூட்டமாக ஒன்றுதிரள்வதால் பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்ட மறந்துள்ளதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதுமட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலிருந்தும் தாராளமாக வியாபாரிகளும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இதற்கும் எதுவித கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தாத நிலை காணப்படுகின்றது.
அதேநேரம் யாழ்ப்பாணத்து கொரோனா செயலணியும் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தம் கொரோனா போன்றே பத்திரிகை அறிக்கைகளில் அச்சுறுத்துகின்றதே தவிர நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதாகத் தெரிவதாக இல்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆபத்தான மாவட்டங்களில் ஒன்றாக இனங்காணப்பட்டுள் எமது யாழ்ப்பாணம் மாவட்டத்தை பாதுகாப்பதற்கு குறித்த துறைசார் பத்திரிகை செய்திக்கானதாக அன்றி முழுமையான நடவடிக்கைகளுக்காக செயற்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|