பத்திரிகைச் சுதந்திரத்தில் இலங்கை 131 ஆவது இடம் !
Friday, April 27th, 2018பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் அளிப்பதில் இலங்கை 131 ஆவது இடத்திலுள்ளது என்று பன்னாட்டு ஆய்வறிக்கையொறில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 141 ஆவது இடத்திலிருந்த இலங்கை 10 இடங்கள் முன்னேறி இந்த வருடம் 131 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்று ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 180 நாடுகளைக் கணக்கில்கொண்டு 2018 ஆம் ஆண்டுக்கான பத்திரிகைச் சுதந்திரத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் நோர்வே இரண்டாவது முறையாகவும் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் இடங்களில் முறையே சுவீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
வடகொரியா பத்திரிகையாளர்கள் மீது அடக்கு முறைகளைக் கையாளும் நாடுகளில் முதலிடத்திலும் பத்திரிகைச் சுதந்திரத்தில் கடைசி இடமான 180 ஆவது இடத்திலும் உள்ளது. வடகொரியாவைத் தொடர்ந்து எரித்திரியா, துர்க்மெனிஸ்தான், சிரியா, சீனா ஆகிய நாடுகளும் முறையே 179, 178, 177, 176 ஆகிய இடங்களில் உள்ளன.
இந்த நிலையில் அண்டை நாடான இந்தியா கடந்த ஆண்டைவிட இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு 136 ஆவது இடத்திலுள்ளது. இந்தியா இந்தப் பின்னடைவைச் சந்தித்ததற்கு செய்தியாளர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் பேச்சுக்களும் சில வன்முறைகளுமே காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவில் பத்திரிகையாளர்கள் கடுமையாகக் கண்காணிக்கப்படுகின்றனர் எனவும் வெளிநாட்டு செய்தியாளர்கள் பணிபுரிய முடியாத சூழல் அந்த நாட்டில் நிலவுகின்றது எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிரும் பொதுமக்கள் கூட அந்த நாட்டில் கைது செய்யுமளவுக்கு மோசமான நிலைமை அங்குள்ளது எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|