பதில் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான சட்ட சிக்கலை நீக்கியது உயர்நீதிமன்றம்!
Tuesday, July 19th, 2022பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
நீதியரசர்களான காமினி அமரசேகர ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம், இந்த மனுவை நிராகரித்துள்ளது.
காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட மனு உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற் கொண்டு இந்த மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியில்லாதவர் என அறிவிக்குமாறு கோரி வினிவித பெரமுனவின் பொதுச் செயலாளர் நாகானந்த கொடிதுவக்கு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் கனிஷ்க டி சில்வா பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்தார்.
மேலும், பொருள், உண்மைகளை தவறான முறையில் மறைத்ததற்காக மனுதாரர் ஏற்கனவே தாக்கல் செய்த இதேபோன்ற மனு, உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமையை அவர் சுட்டிக்காட்டினார்.
தேசியப் பட்டியல் வேட்புமனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து கட்சிச் செயலாளர்களால் பெறப்பட்ட நாளில் இருந்து ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எனினும் கட்டாய காலத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தமக்கு வழங்கிய அறிவித்தல்களுக்கு இணங்கத் தவறியதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே
ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 140 வாக்குகள் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்வாரென ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தாம் இதற்கு முன் தெரிவித்துள்ள இத்தகைய கருத்துக்கள் தவறியதில்லையென குறிப்பிட்டுள்ள அவர், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவது 100 க்கு 1000 வீதம் உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் என்ற வகையில் தாம் பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். நாடு வீழ்ச்சியை நோக்கு பயணித்துக்கொண்டுள்ளது.
இத் தருணத்தில் அதிலிருந்து நாட்டை மீட்பதற்கு அனைவரையும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்பதை நாம் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் தெரிவித்துள்ளேன்.
நாட்டுக்கு மிக விரைவாக செழிப்பான எதிர்காலம் உருவாக வேண்டுமென்பதை மனதிற்கொண்டு அந்த நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதையும் நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|