பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனைய பணிகள் இன்றுமுதல் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தம்!!

Tuesday, July 12th, 2022

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க வானுார்தி நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனையடுத்து, அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது குடிவரவு அதிகாரிகள், தமது கடமைகளை புறக்கணித்தமையை அடுத்து, பசில் ராஜபக்ஷ மீண்டும் நாட்டுக்குள் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தில் இன்று காலைமுதல் மறு அறிவித்தல் வரை பணிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற மற்றும் நெருக்கடி நிலை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரசியல் பிரமுகர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த பட்டுப்பாதை அனுமதி முனையத்தை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பலமான சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.ஏ.எஸ் கனுகல கூறியுள்ளார்.

இதன்படி நேற்றுநள்ளிரவு 12.00 மணியுடன் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இந்த முனையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முயற்சித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: