பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையியல் வேலை வாய்ப்பு – அமைச்சர் அஜித் பெரேரா!
Friday, March 22nd, 2019தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் அல்லாத பட்டதாரிகளுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் பயிற்சியளித்து வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கான பயிற்ச்சிக்காலத்தில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் அதன்பின்னர் 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுமென டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளினதும் விபரங்களையும் பதிவு செய்யும் முறையொன்று உருவாக்கப்படவுள்ளது.
தேர்தல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கான செலவைக்குறைக்கவும் அரச துறையில் நிலவும் ஊழல், மோசடிகளை கட்டுப்படுத்தவும் இந்தப்பதிவு முறை உதவியாக அமையும்.
இதேவேளை நாட்டின் அரச துறையை இலத்திரனியல் முறைக்குள் கொண்டுசெல்லவுள்ளோம். கடந்த வாரம் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வழங்குவது இலத்திரனியல் முறையாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பத்துறையின் செயற்பாடுகள் பலப்படுத்தப்படவுள்ளன. இததுறையில் 10 நிபுணர்களைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. அத்துடன் அமைச்சு மட்டத்திலும் உள்ளக குழுவென்று நியமிக்கப்படும். ஈ கிராம சேவை அதிகாரிகள் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க சகல கிராம சேவை அதிகாரிகளுக்கும் கணினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 915 பாடசாலைகளில் கணினி விஞ்ஞான கூடங்களை உருவாக்கியுள்ளோம். இந்த வருடத்தில் மேலும் 100 பாடசாலைகளில் கணினி விஞ்ஞானக்கூடங்கள் உருவாக்கப்படும். அதே வேளை நாட்டில் முதலீட்டாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனையாகவுள்ள சைபர் தாக்குதல்களைத்தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டங்களை உள்ளடக்கிய சட்ட மூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இதே வேளை தகவல் தொழில் நுட்ப பட்டதாரிகள் அல்லாத பட்டதாரிகளுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் பயிற்சியளித்து வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன் அவர்களுக்கான பயிற்ச்சிக்காலத்தில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும். அதன் பின்னர் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதுடன் மாதாந்த வேதனமாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்றார்.
Related posts:
|
|