பங்களாதேஷ் பிரதமரின் அழைப்பை ஏற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளையதினம் பங்களாதேஷ் விஜயம்!

Thursday, March 18th, 2021

பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவினது அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இருநாள் உத்தியோகபூர்வ விஜமொன்றை மேற்கொண்டு நாளையதிம் பங்களாதேஷ் பயணமாகின்றார்

பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனனதின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டே பிரதமரின் குறித்த விஜயம் அமைந்துள்ளது.

குறித்த விஜயத்தின்போது பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மானின் ஜனனதின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரதமர் விசேட உரையும் நிகழ்த்தவுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இவ்விஜயத்தின் போது பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீத், பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் விவசாயம், வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் பிரதமர் ஈடுபடவுள்ளார்.

பங்களாதேஷ் குடியரசின் இவ்விசேட அழைப்பு மற்றும் இவ்விஜயத்தின் போது நடத்தப்படவுள்ள உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு இடையிலான நீண்டகால வலுவான உறவை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன்  இரு நாடுகளுக்கும் இடையே விவசாயம், தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு போன்ற பல்வேறு துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிடல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: