பகிடிவதை தொடரும் வரை மருத்துவபீடம் மூடப்படும் – மருத்துவ பீட பீடாதிபதி!
Wednesday, May 30th, 2018கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் புதிய மருத்துவ பீட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் பகிடிவதையை கைவிடுவதாக உத்தரவாதம் வழங்கப்படும் வரை பீடம் தொடர்ந்து மூடப்படும் என மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் திருமதி.அருள்பிரகாசம் அஞ்சலா தெரிவித்துள்ளார்.
மருத்துவ பீட மாணவர் சங்கத்திற்கும் பீடாதிபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை மட்டு. போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் திருமதி அருள்பிரகாசம் அஞ்சலா –
இந்த மருத்துவ பீடத்திற்கு முதலாம் ஆண்டிற்கு புதிய மாணவர்கள் சேர்ந்துள்ள போது அவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதை செய்து வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலரும் பாதிக்கப்பட்ட மாணவர்களது பெற்றோர்கள் சிலரும் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
இதனையடுத்து புதிய மாணவர்கள் மீது பகிடிவதை மேற்கொண்ட 5 சிரேஷ்ட மாணவர்கள் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டனர். இந்த நிலையில் தொடர்ந்தும் புதிய மாணவர்கள் மீது பகிடிவதையை சிரேஷ்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மாணவர்களது பெற்றோர் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மருத்துவ பீடம் மூடப்பட்டுள்ளதை அடுத்து மாணவர் சங்கத்தினருக்கும் மருத்துவ பீட பீடாதிபதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் பகிடிவதையால் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் பகிடிவதையை எவ்வாறு நிறுத்துவது போன்ற பல கருத்துக்களை பீடாதிபதிகள் மாணவர்களுக்கு முன்வைக்கப்பட்டது.
இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடல் இடம்பெற்ற போதும் தீர்வு எட்டப்படாத நிலையில் சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதையை நிறுத்துவதற்கு ஒரு செயற்றிட்டத்துடன் உத்தரவாதம் வழங்கப்படும் வரை தொடர்ந்து மருத்துவ பீடம் மூடப்படும் என மருத்துவ பீடாதிபதிகள் தீர்மானித்து தீர்மானத்தை வெளியிட்டதையடுத்து கலந்துரையாடல் முடிவுக்கு வந்தது.
Related posts:
|
|