நோயாளர் காவு வண்டிகள் பற்றாக்குறை – சிரமங்களை எதிர்கொள்ளும் தெல்லிப்பழை மருத்துவமனை!

Thursday, April 12th, 2018

நோயாளர் காவு வண்டிகள் போதியளவு இன்மையால் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. அதற்கமைவாக பல்வேறுபட்ட சிகிச்சை முறைகளுக்கு நோயாளர்களை இடமாற்ற வேண்டிய தேவை உள்ளது. அதற்கு எம்மிடம் உள்ள நோயாளர் காவு வண்டிகள் போதாமல் உள்ளன. 4 வண்டிகள் உள்ளன. அதில் ஒன்று பழுதடைந்தது.

அந்த வண்டி தற்போது திருத்தப்பட்டு பிராந்திய சுகாதாரப் பணிமனையில் உள்ளது. திருத்தப்பட்ட வண்டி எமக்கு மீள் கிடைத்தால் இங்குள்ள நிலைகளை ஓரளவு சமாளிக்கக் கூடியதாக இருக்கும். இது தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் உரியவர்களிடம் வண்டியை தரும்படி கேட்டிருந்தது.

மருத்துவமனையில் பாவனையில் உள்ள வண்டி ஒன்றைத் தந்து திருத்தப்பட்ட வண்டியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதாரப் பணிமனை கூறியிருந்தார்கள். நாள் ஒன்றுக்கு ஆய்வுகூடம், இரத்த வங்கி, கிளினிக் சிகிச்சைக்காக கொழும்புக்கு நோயாளர்களை மாற்றுதல், சிறப்பு சிகிச்சை நிபுணர்களிடம் அழைத்துச் செல்லல் போன்ற தேவைகளுக்காக 30 தடவைகள் தற்போது உள்ள வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன.

வெளிமாவட்டங்களுக்கு சேவையில் வண்டிகள் ஈடுபட்டால் சாரதிக்கு இரண்டு நாள் ஓய்வும் வண்டிக்கு ஒரு நாள் ஓய்வும் கொடுக்க வேண்டியது கட்டாயமானது. இந்த நிலையில் எம்மிடம் உள்ள வண்டிகளை கொடுப்பது நோயாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயற்பாடாகும். ஆகவே எமக்குரிய நோயாளர் காவு வண்டியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: