நோயாளர்களின் நலன்கருதி சாவகச்சேரி மருத்துவமனையில் அலைபேசியைப் பயன்படுத்த பணியாளர்களுக்குக் கட்டுப்பாடு!

Tuesday, June 5th, 2018

சாவகச்சேரி ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவு மற்றும் விடுதிகளில் கடமையாற்றும் பணியாளர்களின் அலைபேசி பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மருத்துவமனைப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

பொறுப்பதிகாரியின் இந்த உத்தரவை மக்கள் வரவேற்றுள்ளனர். பணியாளர்கள் கடமை நேரத்தில் அலைபேசிகளில் உரையாடி தம்மைக் காக்க வைப்பதாக நோயாளர்கள் விடுத்த முறைப்பாட்டினையடுத்தே கடமை நேரத்தில் அலைபேசியில் உரையாடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பணியாளர்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.

மருத்துவமனையில் கடமையில் இருப்போர் அலைபேசியில் நீண்டநேரம் உரையாடுவதால் சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் நீண்ட நேரம் உரையாடல் முடியும் வரை காத்திருக்க வேண்டியுள்ளதென மருத்துவ அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

கடமை நேரத்தில் அலுவலக தொலைபேசி மற்றும் சொந்த அலைபேசியில் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் சிகிச்சை பெறவரும் நோயாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குறுகிய நேரத்தில் உரையாடுமாறும் மருத்துவமனைப் பொறுப்பதிகாரி மட்டுப்படுத்தியுள்ளார். பொறுப்பதிகாரியுடைய இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களின் மனங்களைப் புரிந்தவர் அவர் என்று மக்கள் தெரிவித்திருந்தனர்.

Related posts: