நோக்கங்கள் ஒன்றாக இருந்தபோதிலும் வழிமுறைகள் வேறுபட்டவையாக இருந்தன – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, March 29th, 2016

புலிகளினதும் எமதும் நோக்கம் ஒன்றாக இருந்த போதிலும் வழிமுறைகளே வேறுபட்டவையாக இருந்தது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களிடம் அரசியல் இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இன்றுவரை இல்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தீபம் வார இதழ் வாராவாரம் தனது பதிப்பில் பிரசுரித்துவரும் “தீபத்தின் கேள்விக்கு என்ன பதில்’ என்னும் மக்கள் பிரதிநிதிகளை மக்கள் மன்றத்திற்கு அழைத்துவரும் பகுதியில் இந்த வாரம் மக்கள் பிரதிநிதியாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மக்களது கேள்விக்கு பதிலளித்திருப்பது வெளியாகியுள்ளது. குறித்த அந்த பகுதியை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக முழுமையாகப் பதிவிடுகின்றோம்.

நிரோசன்–  சாவகச்சேரி கேள்வி:-  நீங்கள் கடந்த அரசுடன் இணைந்திருந்த காலத்தில் வலிவடக்கு மக்களின் காணிகளை பெரியளவில் விடுவிக்க முடியவில்லை. ஆனால் தற்போது காணிகள் அதிகமாகவிடுவிக்கப்பட்டுள்ளது. ஏன் உங்களால்அதை செய்ய முடியவில்லை?

டக்ளஸ் தேவானந்தா:

எமது அரசியல்ப் பணிகள் அனைவரையும் சென்றடைய முடியாமல் திட்டமிட்ட இருட்டடிப்புகள் நடந்தன. நான் கடந்த அரசில் அமைச்சராக இருந்த போது வடக்கில் 17522 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கின்றேன்.

கிளிநொச்சியில் 541ஏக்கர் நிலத்தை படையினரின் வசமிருந்து நானே மீட்டு அறிவியல் நகரம் அமைக்கப்பட்டது.. இதை விட பலநூறு சோதனை சாவடிகள் அகற்றப் பட்டு இராணுவப்பிரசன்னம் படிப்படியாக குறைக்கப்பட்டது. அன்றைய எனது இந்த பாரிய பணிகளின் போது இதற்காக என்னுடன் இணைந்து உழைத்தவர்களில் முக்கியமானவர் இன்றைய ஜனாதிபதி மைத்திரி பால சிறீசேனா அவர்கள். அன்று அமைச்சராக இருந்த அவரே நில மீட்புகுறித்து நாம் ஆற்றிய பணிகளுக்கு சாட்சி. நான் நேரடியாகவே மக்களை அழைத்து சென்று மீட்கப்பட்ட நிலங்களில் அவர்களை குடியமர்த்தியிருக்கின்றேன்.

ஆகவே அந்த மக்களும் சாட்சி. அதன் தொடர்ச்சியாகவே புதிய ஆட்சியிலும் மக்களின் குடியிருப்பு நிலங்கள் சில இடங்களில் விடுவிக்கப்பட்டுவருகின்றன.

எமது மக்களின் அடிப்படை விடயங் களான, அரசியல் தீர்வு, நில மீட்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் தொடர்பான விடயம் என்ப வற்றை வலிமையாக முன்னெடுத்து தீர்வு காண்பதற்கு, போதுமான அரசியல் அதிகாரங்கள் இருக்கவேண்டியது அவசியமாகும். துரதிஸ்ட்டவசமாக அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இணக்க அரசியல் வழிமுறையூடாகவே இவ்விடயங்களை கையாள முடியும் என்று நான் நீண்டகாலமாகவே கூறிவருவதோடு,அதையே செயற்படுத்தியும் வந்திருக்கின்றேன்.

ஆனால் அந்த வாய்ப்பு கிடைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதைச் செய்யவில்லை. இன்று அவர்கள் வைத்திருக்கும் அரசியல் பலம் அன்றே எம்மிடம் கிடைத்திருந்தால் எஞ்சியுள்ள நிலங்களையும் அன்று நாமே மீட்டெடுத்திருப்போம். இந்த கேள்வியைஎன்னிடம் கேட்ட தம்பி நிரோசன் தமிழ்அரசியல் கைதிகளின் விடுதலை, மற்றும் வடக்கின் அபிவிருத்தி என்று இன்னும்பலதை என்னிடம் கேட்டிருக்கலாம்.

2009 மே மாதத்தின் பின்னர் 12500 முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள்புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு நான் பிரதான பங்காற்றியிருக்கிறேன். அந்த தமிழ் இளைஞர் யுவதிகள் தொழில் பயிற்சிகளுடன் சகவாழ்விற்கு திரும்பியது என்பது மந்திர மாயா ஜாலங்களால் நிகழ்ந்தவிடவில்லை. அதற்காக ஆரவாரமில்லாமல் நான் அரசியல் தலைமையாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்து எடுத்துக் கொண்ட முயற்சிகள் மிக அதிகமாகும்.

.திலீபன்நெல்லியடி கேள்வி:- விரைவில் தொகுதிவாரி தேர்தல்முறை வருமென கூறப்படுகிறது. அது உங்கள் கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதித்து வத்தை பாதிக்காதா?

டக்ளஸ் தேவானந்தா:

அது எங்களை பாதிக்காது. எமது மக்களைத்தான் வெகுவாக பாதிக்கும். மக்கள் நலனா? கட்சிகளின் நலனா? இதுவே இங்கு பிரதான கேள்வி.

இன்றுள்ள விகிதாசார தேர்தல் முறையி லேயே சகல கட்சிகளும் பிரதிநித்துவங்களை கொண்டிருக்க முடிந்த பன்மைத்துவ ஜனநாயக தன்மைகள் அடங்கியிருக்கின்றன. இதுவே சகல கட்சிகளுக்கும் வாக்களிக் கும் அனைத்து மக்களுக்கும் விமோசனம் கொடுக்கும். புதிய அரசிய யாப்பு குறித்து நாம் எமது யோசனைகளை தெரிவித்திருக் கிறோம். அதில் கலப்பு தேர்தல் முறை குறித்த யோசனைகளையே நாம் முன்வைத் திருக்கிறோம்.

சண்முகசுந்தரம்சரசாலை கேள்வி:- தமிழ் கட்சிகள் பல திசைகளிலும் பிரிந்து நிற்கின்றன. எல்லா கட்சிகளும் ஒற்றுமையாக, ஒரே திசையில் பயணித்தால் தமிழர்கள் பலமாக இருக்கலாம். ஒரே கொள்கையின் கீழ் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட ஏன முயற்சிக்க கூடாது?

டக்ளஸ் தேவானந்தா:

ஈ.பி.டி.பி எப்போதுமே அரசியல் தீர்வுக்காவும், தமிழ் பேசும் மக்களின் விமோசனத்திற்காகவும் ஒன்றுபட்டு செயலாற்றவும், ஓரணியாக உழைக்கவும் தயாராகவே இருக்கின்றது, இருந்தது. அத்தகைய கூட்டுச் செயற்பாட்டுக்கு சரியான இலக்கையும், அதை அடைந்து கொள்வதற்கான நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டத்தையும் வரைந்து கொள்ள வேண்டும் என்பதையே நீண்டகாலமாக கூறி வருகின்றேன்.

நீங்கள் கேட்டதைப்போல் பரந்து பட்ட ஐக்கிய முன்னணி ஒன்றின் அவசியம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தேவை என்பது உண்மை. ஆனாலும் அது வெறும் தேர்தலுக்காக ஐக்கியப்படுவதும், தேர்தல் முடிந்தவுடன் கூட்டுக்குள் குத்து வெட்டு நடத்தி தனித்தனியே பிரிந்து நின்று முரண் படுவதும், அடுத்த தேர்தல் வரும் போது மறுபடியும் தமிழர் ஐக்கியம் என்றும், தமிழ்ர் தேசியம் என்றும் கூறி கூட்டுச்சேர்வதுமே இங்கு நடந்து வருகிறது.

ஆகவே தேர்தலுக்காக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை முதல் நில மீட்பு, மீள் குடியேற்றம், வாழ்வாதாரம், மற்றும் அபிவிருத்தி வரை தமிழர் தரப்பில் இருந்து பொது நோக்கில் ஐக்கியப்பட்டு செயலாற்ற பரந்து பட்ட கூட்டு ஒன்றே தேவைப்படுவது உண்மை.

விரிக்கும் சிறகுகள் இரு வேறாக இருப் பினும் பறக்கும் திசை ஒன்றே. ஆகவே ஐக்கியத்திற்கான கதவுகளை நாம் என்றும் திறந்தே வைத்திருக்கின்றோம். அப்படி ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியை முன் னெடுப்பதில் ஊடகங்கள் முக்கியபங்காற்றவேண்டுமென பல தடவைகள் கூறியிருக்கின்றேன். ஊடகங்கள் ஒத்துழைக்காவிட்டால் இவர்களுக்கு அரசியலே இருக்க முடியாதல்லவா?

சிவராசாமட்டுவில் கேள்வி:- விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக் கப்பட்ட பின் தமிழர்களிற்கான தீர்வு வாய்ப்புக்கள் பெருமளவு இல்லாமல் போய் விட்டது. தீர்வு விடயத்தில் இப்போதைய தமிழ்கட்சிகளின் செயற்பாடு அதிருப்திதான் அளிக்கிறது. தீர்வு விடயத்தில் இதுவரை இருந்த அணுகுமுறைதான் உங்கள் கட்சியிடம் இப்பொழுதுமுள்ளதா? மாற்றங்களுள்ளதா?

டக்ளஸ் தேவானந்தா:

புலிகள் தோற்கடிக் கப்பட்ட பின்னர் தீர்வுக்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விட்டதாக நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் வரலாற்றை சிறிது பார்க்க வேண்டும். புலிகள் இருந்தபோதே இலங்கை இந்திய ஒப்பந்தம், புலிகள் பிறேமதாசா பேச்சவார்த்தை, புலிகள் சந்திரிக்கா பேச்சுவார்த்தை, புலிகள் ரணில் ஒப்பந்தம், புலிகள் மகிந்த ராஜபக்ச புரிந்துணர்வு என்று பல வாய்ப்புக்கள் கிடைத்தும் அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

அப்போதிருந்த தமிழ்த்தலைமைகளும் அதற்கான முயற்சியைசெய்யவில்லை. புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வை அடையலாம் என்று எண்ணியிருந்தவர்கள்அல்ல. ஜனாநாயக வழிமுறைக்கு வந்திருந்தநாம் அரசியல் ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாகவே எமது இலக்கை அடையலாம்என நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றோம்.

சரியோ தவறோ புலிகளின் தலைமை தமது இலக்கை அடையும் வழிமுறையில் உறுதியாகவே இருந்திருக்கிறார்கள். நாமும் எமது இலக்கை அடைவதில் எமது வழிமுறையில் உறுதியாகவே இருந்து வருகின்றோம்.

வழிமுறைதான் வேறுவேறானது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில்உள்ளவர்களிடம் அரசியல் இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதி இல்லை.

1994ஆம் ஆண்டு முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா  ஆட்சிக்காலத்தில் சிறந்ததொரு அரசியல் தீர்வு கொண்டு வரப்பட்டது. ஆனாலும் அந்த தீர்வு யோசனைகள் அன்றைய ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போட்டிகளால் நாடாளுமன்றத்திலேயே வைத்து கொழுத்தி எரிக்கப்பட்டது.

அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பும் சேர்ந்தே அந்த தீர்வை எதிர்த்திருந்தமை ஒரு மாபெரும் வரலாற்றுதவறு.

வட மாகாண சபையை பைப்பற்றியவர்கள் என்ன செய்தார்கள்…? காணி பொலிஸ்அதிகாரங்களை தவிர்த்து பார்த்தால் 37அதிகாரங்கள் அதில் உள்ளன. அவற்றில் ஒரு அதிகாரத்தையேனும் எமது மக்களுக்காகநடைமுறைப்படுத்தும் உறுதிப்பாடு அவர்களிடம் இல்லை. ஆளுனர் தடை என்றார்கள்,பிரதம செயலாளர் தடை என்றார்கள். புதிய ஆட்சி மாறி வந்து ஆளுனரையும் பிரதம செயலாளரையும் மாற்றினார்கள். அதற்கும் பின்னரும் எந்த முன்னேற்றங்களும் வடமாகாணசபையில் ஏற்படவில்லை.

வந்த நிதியில் ஒரு பகுதி செலவழிக்காமலேயே திரும்பி போகிறது. ஆகவே அரசியல் இலக்கை அடைய வேண்டும் என்ற உறுதி அல்லது அதற்கான செயற்திறன் அவர்களிடம் இல்லை.ஆகவே அரசியல் தீர்வு விடயத்தில் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டியவர்கள் நாமல்ல. இதுவரை காலமும் வாய்ப்புகளை பயன்படுத்த மறுத்துவருபவர்களே தமது அணுகு முறைகளை மாற்றியமைக்க வேண்டியவர்கள்.

4567

Related posts: