நேர்முகத் தேர்வினூடாக அதிபர் சேவைக்கு தகுதியானவர்களை இணைக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, March 2nd, 2021

போட்டிப் பரீட்சைக்கு பதிலாக முறையான நேர்முகத் தேர்வை நடத்தி, இலங்கை அதிபர் சேவைக்கான மூன்றாம் தரத்திற்கு தகுதியானவர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சர், பேராசிரியர் பீரிஸினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா நிலைமையால் போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு ஒரு வருடத்திற்கு அதிகமான காலம் தேவை என்பதால் முறையான நேர்முகத் தேர்வை நடத்தி அதிபர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக அதிபர் பதவியில் பதில் கடமைகளை மேற்கொள்ளும் ஆசிரியர் சேவையில் தகைமை பெற்ற உத்தியோகத்தர்களும் சேவை யாப்பிற்கு அமைய தகைமைகளை பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் சேவையிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் இதனூடாக வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் உரிய நேர்முகத் தேர்வினூடாக அதிபர் சேவையின் தரம் மூன்றிற்கு நியமனங்களை வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனிடையே இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்று, தரம் இரண்டு மற்றும் மூன்றாம் தரங்களுக்குரிய 4,600 வெற்றிடங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: