நேட்டோவில் இணைவதற்கு விரும்பவில்லை – மண்டியிட்டு தானமாக பெறும் நாட்டின் அதிபராக நான் இருக்க விரும்பவில்லை என நேட்டோவுக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!

Wednesday, March 9th, 2022

நேட்டோவுடன் இணைவதற்கு தான் விரும்பவில்லையென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு பெரிய அளவில் உதவிகள் எதுவும் செய்யவில்லை. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாகவே தெரிவித்தார். இந்நிலையிலேயே இவ்வாறான அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் நாட்டை நேட்டோ நாடுகள் அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

அதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. எனவே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது.

தற்போது போர் 14 நாட்கள் ஆன நிலையில், இது தொடர்பில் ஜெலன்ஸ்கி கருத்துத் தெரிவிக்கையில், நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவேண்டும் என்று உக்ரைன் விரும்பியது. ஆனால் நேட்டோ, உக்ரைனை ஏற்க விரும்பவில்லை என்பதை இப்போது தான் புரிந்து கொண்டோம்.

எனவே நேட்டோ அமைப்பில் எங்களை உறுப்பினராக சேர்த்து கொள்ளுங்கள் என்ற எங்களின் கோரிக்கைக்கு இனியும் அழுத்தம் கொடுக்க போவதில்லை. இனி நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவிரும்ப வில்லை.

மண்டியிட்டு எதையாவது தானமாக பெறும் நாட்டின் அதிபராக இருக்க நான் விரும்பவில்லை. ரஷ்ய அதிபர் புடின், உக்ரைனில் உள்ள 2 பிரிவினைவாத குழுக்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கி உள்ளார்.

அந்த குழுக்கள் தொடர்ந்து எங்களுடன் போரிட்டு வருகிறார்கள். அங்கு வசிக்கும் மக்கள் உக்ரைனின் பகுதியாக வாழவே ஆசைப்படுகிறார்கள். ரஷ்யாவை தவிர வேறுயாரும் இக்குழுக்களை அங்கீகரிக்கவில்லை.

அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு குறித்த உத்தரவாதம் வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புடின் இப்பிரச்சினைகள் குறித்து திறந்த மனதுடன் பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும்.

ஒக்சிஜன் இல்லாமல் சுவாசிக்க முயற்சிப்பதற்கு பதில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வரவேண்டும். அதற்கான கலந்துரையாடலை அவர் தொடங்க வேண்டும்எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: