நெல் அறுவடை தேவையான அளவை எட்டியுள்ளது – நாட்டில் செயல்படும் “அரிசி மாபியாக்களே சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டு!

Wednesday, June 23rd, 2021

அரசாங்க மதிப்பீடுகளின்படி, நெல் அறுவடை தேவையான அளவை எட்டியுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சரவை இணைப் பேச்சாளரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான ரமேஷ் பத்திரன, ஆனால் நாட்டில் செயல்படும் “அரிசி மாபியா” க்கள் இந்த திட்டங்களை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அதன்காரணமாகவே அரிசியின் சந்தை விலையைக் கட்டுப்படுத்த 100,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – தரமான கரிம உரங்களை வழங்குவதற்காக உள்ளூர் உர ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தவும், உயர்தர கரிம உரங்களை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அடுத்த பருவத்திற்கு தேவையான உரங்களை வழங்க விவசாய அமைச்சு ஏற்கனவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்முதல் நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ளது.

அந்த நடவடிக்கைகளை விரைவாக நடைமுறை படுத்துவதாகவும், விவசாயிகள் உரம் தொடர்பாக எந்தவிதமான தேவையற்ற அச்சங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று நாங்கள் பொறுப்புடன் கூறுகின்றோம்.

மேலும், இந்த நாட்டிலுள்ள அனைவரினதும் எதிர்கால நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவினூடாக, அடுத்த 6 மாதங்களின் குறுகிய காலத்தை ஒரு தன்னிறைவு பெற்ற இலங்கை நச்சு விவசாயத்திலிருந்து விடுபடுவதற்கு சற்றே கடினமாக இருக்கும்,

ஆனால் இதுபோன்ற குறுகியகால சிரமங்களை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில், அந்த காலகட்டத்தில் பயிர்கள் சேதமடைந்தால் அதற்கு இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாக  தெரிவித்தார்.

இதனிடையே அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் –

தற்போது உர வகைகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு இல்லை. 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் உரங்களுக்கான தட்டுப்பாடல்ல என்றும் மாறாக சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டுகளில் அதிகளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் இந்தப் பருவத்திற்கு போதுமான அளவு உரம் உண்டு. இந்த பருவத்திற்கு உரத்தட்டுப்பாடொன்று இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், விநியோகத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சில அரசியல் குழுக்கள் தங்களது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் செயல்பட்டு வருவதாகவும், 100 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதியை தமக்கு சாதகமான அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உரத்திற்கு தட்டுப்பாடல்ல, ஆனால் நாட்டில் கூடுதலாக அரிசி சேமித்து வைக்கப்பட வேண்டும். அத்தோடு தற்போதைய சூழ்நிலையில் உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே போன்று உரத் தட்டுப்பாடொன்று ஏற்படுவதாக இருந்தால், அது அடுத்த பருவத்திற்காகவே இருக்கும், இந்த பருவத்திற்காக அல்ல என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: