நெற்செய்கை அழிவுறும் அபாயம் – பல்லவராயன்கட்டு பகுதி விவசாயிகள் கவலை!

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவிலுள்ள நல்லூர் பல்லவராயன்கட்டு குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட 321 ஏக்கர் நெற்செய்கை அழிவுறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குளத்தின் நீர் முற்றாக வற்றிச்செல்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தின் மூன்றாவது நீர்ப்பாசன குளமாக கருதப்படும் குறித்த குளத்தின் கீழ் 400 ஏக்கர் வரை செய்கை பண்ணப்படுவதாகவும் இவ்வருட சிறுபோகம் 321 ஏக்கர் வரை மேற்கொள்வதற்கு நீர்ப்பாசன திணைக்களம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் தற்போது குளத்தில் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் சிறுபோக செய்கையை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் நெற்செய்கைக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வங்கிக் கடனை செலுத்த முடியாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திட்டமிடப்படாத செய்கைக்கான அனுமதி போன்ற காரணங்களும் இந்த இழப்பிற்கு காரணமென குறிப்பிடுகின்றனர்.
சிலர் நீர் பம்பி மூலம் நீர் இறைத்து குறிப்பிட்ட அளவு பயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள போதும் அது போதுமானதாக இல்லை. அக்கராயன் குளத்திலிருந்து நீரை பெற்றுக்கொள்ள முயன்ற போதும் குறித்த குளத்தின் நீரும் குறைவடைந்து செல்வதால் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றனர்.
இந்நிலையில் காலபோகம் நிறைவடைந்ததும் தமக்கான சிறுபோகத்திற்கான அனுமதியை தந்திருந்தால் காலபோகம் செய்யப்பட்ட ஈரழிப்பான நிலையில் தாம் சிறுபோகத்தினை செய்திருக்கலாம் எனவும் காலம் பிந்தியமையாலேயே தாம் இவ்வாறான பாதிப்பிற்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள்இ தமக்கான நட்டஈட்டை பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
Related posts:
|
|