நெருக்கடியான சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை – புகையிரத தொழிற்சங்கங்களுக்கு இராஜாங்க அமைச்சர் கடும் எச்சரிக்கை!

Sunday, May 2nd, 2021

கொரரானா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு அலுவலக சேவை நேரத்தின் போது அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் ஈடுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நெருக்கடியான சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படவுள்ளதாக குறிப்பிடப்படும் புகையிரத தொழிற்சங்கங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம –

அரச மற்றும் தனியார் பேருந்து சேவை மற்றும் புகையிரத சேவைகளில் பயணிகள் ஆசன அடிப்படையில் மாத்திரம் பயணம் செய்ய வேண்டும் என கட்டாயமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவையில் சமூக இடை வெளியை பேணுவது தற்போது வரை சாத்தியமற்றதாக காணப்படுகிறது. காலை மற்றும் மாலை அலுவலக சேவை நேரத்தில் பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து சேவையினை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

இவ்வாறான நிலையில் பேருந்துக்குள் சமூக இடைவெளியை பேணுவது சாத்தியமற்றதாக உள்ளது.

ஆகவே அலுவலக சேவைக்கு அரச பேருந்துகளை வழமைக்கு மாறாக அதிகரிக்கவும், காலை மற்றும் மாலை பேருந்து குறுகிய தூர பேருந்து போக்குவரத்து சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தவும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் இவ்வாரம் முதல் அமுல்படுத்தப்படும். ஒரு சில புகையிரத தொழிற்சங்கத்தினர் எதிர்வரும் 5 ஆம் திகதி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக அறிய முடிந்துள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்படுவதை தொழிற்சங்கத்தினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

காணப்படும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும். முறையற்ற வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினருக்கு எதிராக இம்முறை கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: