நெருக்கடிகளால் நாடு நிறைந்திருப்பது தெரிந்தே நாட்டை பொறுப்பேற்றேன் – நாட்டை நிச்சயம் மீட்டெடுத்தே தீருவேன் – ஜனாதிபதி உறுதி!

Saturday, February 5th, 2022

நெருக்கடிகளால் நாடு நிறைந்திருப்பது தெரிந்தே நாட்டை நான் பொறுப்பு ஏற்றேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதிலிருந்து நாட்டை நிச்சயம் மீட்டெடுத்தே தீருவேன் என்றும் தெரிவீத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

சுதந்திரமான ஒரு நாட்டின் கௌரவம் மிக்க ஒரு பிரஜையாக வாழ்வதற்குள்ள உரிமையை முன்னிட்டு, வரலாறு முழுவதும் பல நாடுகளின் மக்கள் கலவரங்களை நடத்தியுள்ளார்கள். போர்களையும் முன்னெடுத்துள்ளார்கள்.

இலங்கையிலும், 2,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றின் பல காலப்பகுதிகளில், வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய – துட்டகைமுனு, வலகம்பா, மஹா பராக்கிரமபாகு, விஜயபாகு, ஆறாவது பராக்கிரமபாகு போன்ற சிறந்த மன்னர்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து நாட்டை மீட்டு நாட்டை ஒன்றுபடுத்தினார்கள்.

இறுதியாக, ஏறத்தாழ 450 ஆண்டு காலமாக இருந்து வந்த ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிகளிலிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்று தற்போது 74 ஆண்டுகள் கடந்துள்ளன.

சுதந்திரத்தின் பின்னரும்கூட 3 தசாப்தங்களுக்குக் கிட்டிய காலத்தில் பயங்கரவாதச் செயற்பாடு ஒன்றின் ஊடாக எமது நாட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க முயன்றமைக்கு எதிராகப் போராடவும் எமக்கு நேர்ந்துவிட்டது.

ஆனாலும் அவற்றையெல்லாம் வெற்றிகண்டு இன்று இலங்கையானது ஒரு சுதந்திரமான இறைமை பொருந்திய ஜனநாயக நாடாக விளங்குகிறது. நாம் அதன் அபிமானம் கொண்ட பிரஜைகளா இருக்கின்றோம்.

இதேநேரம் இலங்கைப் பிரஜைகள் பரிபூரணமாக ஜனநாயக முறைமையொன்றினூடாகத் தத்தமது மக்கள் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுப்பதற்கும் விரும்பியவர்கள் அரசியல் செயற்பாட்டினூடாக அரச ஆட்சியில் சம்பந்தப்படுவதற்கும் சுதந்திரம் இருக்கின்றது. இது, எம் அனைவரது மகிழ்ச்சிக்கும் அபிமானத்துக்கும் உரியதொரு காரணமாகும்.

சுதந்திரம் மிக்க ஜனநாயக ரீதியிலான நாடு ஒன்றின் மக்கள் என்ற வகையில், நம் எல்லோருக்கும் சிறப்புரிமைகள் இருப்பது போன்று பொறுப்புகளும் இருக்கின்றன.

எல்லோரும் நாட்டுக்காகத் தமது பொறுப்புகளை நிறைவேற்றும்போதுதான் கிடைத்த சுதந்திரத்தின் உச்சகட்டப் பயன் கிடைக்கும். அத்துடன் பொறுப்புகளை மறந்துவிட்டு உரிமைகளைப் பற்றி மட்டும் பேசுவது பொருத்தமாக இருக்காது.

ஒரு நாடானது, சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய சகல அம்சங்களினாலும் வலுவடையும் போதே, அந்த நாட்டின் சுதந்திரமானது மிக அர்த்தமுள்ளதாக அமைகிறது.

அதற்காக முனைப்பாகப் பங்களிக்கும் சந்தர்ப்பம், நாட்டின் அரசாங்கத்தைப் போன்றே நாட்டின் மக்களுக்கும் உள்ளது.

ஒரு நாட்டை உரிய திசையை நோக்கிக் கொண்டுசெல்லும் போது, அதற்காக நாட்டின் அனைவரது உதவியையும் எதிர்பார்க்க முடியாது என்பதையும் நான் அறிவேன்.

ஆனால், அதற்காக – மாற்றமடையத் தயார் இல்லாதோருக்காகக் காத்திருந்து நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக நாம் திட்டமிட்டுள்ள விடயங்களைப் பிற்போடவோ அல்லது கைவிடவோ நான் தயாரில்லை.

எமனது நோக்கமானது, நாடு சார்பில் சரியானதைச் செய்வதே தவிர எல்லோரையும் திருப்திப்படுத்துவதல்ல.

எதிர்காலத்தை நற்சிந்தனையுடன் நோக்கும் ஆக்கபூர்வு முறை ஒன்றின் மூலம் மட்டும்தான், நாம் எமது வருங்காலப் பயணத்தில் வெற்றிபெற முடியும்.

வெற்றிகரமானதொரு பயணத்துக்கு வேண்டிய அர்ப்பணிப்புகளைச் செய்தால் மட்டும் தான், நாம் எதிர்கொள்கின்ற சவால்களை வெல்ல முடியும். எதிர்க்கணிய சிந்தனையும் அவநம்பிக்கையும் உடையவர்கள் ஒருபோதும் உலகை மாற்றிவிட மாட்டார்கள். அவர்களுக்கு அதற்கான ஆற்றலும் இல்லை.

ஒரு பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை முன்வைக்காமல், வெறுமனே விமர்சனம் மட்டும் செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு உண்மையில் எதிர்காலத்தைப் பற்றிய நோக்கு இல்லை என்பதே உண்மை.

ஒரு நாட்டின் தலைவரே அநேகமான கஸ்டங்கள், அனர்த்தங்கள், பிரச்சினைகள் மற்றும் சவால்களைத் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடுகிறது. ஒரே நோக்கை நோக்கி ஒரு குழுவைத் தொடர்ந்து வழிநடத்துவது இலகுவானதல்ல.

அத்துடன் எவ்வளவு நல்ல நோக்கமாக இருப்பினும், நடைமுறையில் இருக்கின்ற முறைமைகளை மாற்றுவது இலகுவானதல்ல.

சில விடயங்களில், உள்நாட்டு சக்திகளைப் போன்று அந்நிய சக்திகளும் எம்மை எதிர்த்து ஒன்றுகூடுகின்றன.

சிலவேளை உங்களது பக்கத்தில் நிகழும் செயல்கள் எல்லாமே உங்களுக்கு எதிராக நடக்கும் சதியாகத் தோன்றும் சந்தர்ப்பங்களும் உள்ளன.

மக்கள், தமது தலைவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது, இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் முகாமைத்துவம் செய்துகொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே தவிர – நாடு சந்திக்கும் பிரச்சினைகளிலிருந்து தப்பி ஓடுவது அல்ல. அதற்குத் தேவையான ஆக்கமுறையான உளப்பாங்கு எம்முள் இருக்கின்றது.

அந்தவகையில் நாடு எதிர்கொள்கின்ற எந்தவொரு சவாலையும் வெற்றிகாண்பதற்காகத் தலைமைதாங்க நான் எப்பொழுதும் தயாராக இருக்கின்றேன்.

அண்மைக்கால வரலாற்றில் நாம் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டுள்ளோம்.

பயங்கரவாதத்தை ஒருபோதும் போரினால் தோற்கடிக்க முடியாதென்று அன்று பூரண அவநம்பிக்கைச் சிந்தனையை கொண்டுள்ளவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தபோது –

ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, ஜெனரல் விஜய விமலரத்ன போன்ற இராணுவத் தலைவர்கள், பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியுமென்ற ஆக்கமுறையான சிந்தனையை அவர்களின் கீழ் போராடிக் கொண்டிருந்த இராணுவ உத்தியோகத்தருக்குள் ஊடுருவச் செய்தனர்.

பிற்காலத்தில் சீரான அரசியல் தலைமைத்துவத்தின் கீழ், சுமார் மூன்றரை ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தினுள் பயங்கரவாதத்தை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதற்கு – எமது ஆற்றல்கள் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையே காரணமானது.

நாம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எவையும் நீண்டகாலப் பிரச்சினைகள் அல்ல. ஆக்கமுறையுடன் கூடிய ஓர் அணுகுமுறையினூடாக எமக்கு இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடிக்கொள்ள முடியும்.

ஆயினும், அந்த வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்திக் கொள்வதற்காக நாம் அனைவரும் செய்ய வேண்டிய வேலைப்பகுதி உள்ளது.

நாங்கள் முன்வைத்த ‘சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப் படுத்துவதற்காகவே மக்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.

அந்தவகையில் சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை எய்திய பெருமைமிகு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றுசேருமாறு – நாட்டுப்பற்றுள்ள இலங்கையர்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: