நெரிசலை ஏற்படுத்திவிட்டு சுகாதாரப் பிரிவை நோக்கி விரல் நீட்ட வேண்டாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021

நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களை கையாளுவது மிகவும் சிரமமாகியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரச பணியாளர்கள் மீள கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்..

இவ்விடயம் தொடர்பில் தான் தொடர்ந்தும் அறிவுறுத்திவந்தபோதிலும், எந்த பலனும் இல்லை என தெரவித்த அவர் பொதுபோக்குவரத்து  சேவைகளை முன்னெடுத்து செல்பவர்கள், இலாபம் பெறும் நோக்கில் செயற்படுவதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் –  இன்றையதினம் அனைவரும் கடமைக்கு அழைக்கப்பட்டதால் தொடருந்து மற்றும் பேருந்துகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரச பணியாளர்களை கடமைக்கு அழைப்பவர்களும், பொதுப்போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பவர்களும் இது தொடர்பில் கவனத்திற்கொள்ள வேண்டும்.

இலாபத்தை நோக்காக கொண்டு செயற்பட்டால் சுகாதாரப் பிரிவினால் இதற்கு பொறுப்புகூற முடியாது. எனவே, இதுபற்றி நாம் தொடர்ந்து பேசுவதில் எந்த பயனும் இல்லை.

பொதுப்போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள், அரச துறையினர் என அனைவரும் இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

தனியாளாக நாம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியாது. தடுப்பூசி செலுத்தல், நோயாளர்களுக்கு சிகிச்சையளித்தல் என்பவற்றுக்கு மத்தியில் மக்களை கையாளுவது சிரமமான காரியம். எனவே, சுகாதாரப் பிரிவை நோக்கி மாத்திரம் விரல் நீட்டுவது பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுவான வைரஸ் தொடர்பில் கையாளப்படும் நடைமுறையே கொவிட் வைரஸ் தொடர்பிலும் கடைபிடிக்கப்படுகிறது. காலத்துக்கு காலம் திரிபடையும் வைரஸ்களுக்கு ஏற்றவகையில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை அன்று முதல் கையாளப்படுகிறது. எனவே, மூன்றாவது தடுப்பூசி அல்லது வருடாந்தம் எதிர்ப்புசக்தி ஊக்குவிப்பு ஊசி செலுத்துவது தொடர்பில் தயாராவது மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறான தேவை ஏற்படின் சுகாதார அமைச்சு அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

Related posts: