நெடுந்தீவுப் பெண்களிடம் அனந்தி சசிதரன் மன்னிப்புக் கோரவேண்டும் – நெடுந்தீவு பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்!
Saturday, May 26th, 2018நெடுந்தீவுப் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு தமது பகுதி வாழ் பெண்களை அவமதித்துள்ளமையால் வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருக்கும் நெடுந்தீவு பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு அதன் தவிசாளர் பற்றிக் றொசாந்த் தலைமை நேற்றையதினம் (25) நடைபெற்றது. இதன் போதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து தெரியவருவதாவது –
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவு பிரதேசத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றபோது நெடுந்தீவில் வாழும் பெண்கள் நடத்தை தவறான அவமானங்களுடனேயே வழ்ந்து வருவதாகவும் அவ்வாறான அச்சுறுத்தல்கள் இன்றும் இங்கு இருப்பதால் வெளியிடங்களிலிருந்து பெண் ஆசியரியர் கூட இப்பகுதிக்கு வந்த கற்பிப்பதற்கு அச்சமடைகின்றனர் என்றும் நெடுந்தீவில் இன்றும் பயங்கரமான சூழல் காணப்படுவதாகவும் என பலவாறு விமர்சனம் செய்திருந்தார்.
அனந்தி சசிதரனின் குறித்த கருத்தால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை என்றும் கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருக்கவில்லை என்றும் அனந்தி சசிதரனுடன் கடுமையாக விவாதித்துள்ளனர். இதையடுத்து குறித்த கருத்தை அனந்தி சசிதரன் வாபஸ் பெறவேண்டும் என்றும் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிலையிலேயே அனந்தி சசிதரன் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என நெடுந்தீவு பிரதேச சபையில் குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இப்பகுதியில் அதிக ஆசனங்களை பெற்றிருந்த போதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்கு ஆட்சி அமைத்துள்ள நிலையில் குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் கீழ் தீர்மானம் கொண்டுவரப்பட்டு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் கடந்த காலங்களில் நாடாளுமன்றில் இதே போன்ற கருத்தை தெரிவித்திருந்த நிலையில் அது குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன் குறித்த சபையில் அவருக்கெதிராகவும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|