நெடுஞ்சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பணிப்பு!

Monday, February 7th, 2022

இலங்கையில் தற்போது வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை ஆறு மாதங்களுக்குள் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிந்தக குணரத்னவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்..

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் நெடுஞ்சாலைகள் செயற்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் பிரிவு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

2021 ஆம் ஆண்டில், பின்னதுவ, அபரெக்க, குருந்துகஹஹெதக்ம, அங்குனகொலபெலஸ்ஸ, அதுருகிரிய மற்றும் களனிகம ஆகிய இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் 07 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களினால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டில் மொத்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை 461 ஆகும். 2020 ஆம் ஆண்டில், நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற மொத்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை 308 ஆகும்.

2020 ஆம் ஆண்டில், களனிகம மற்றும் குருந்துகஹஹெதக்ம ஆகிய இடங்களில் ஐந்து அபாயகரமான வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகளவான விபத்துக்கள் சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதன் காரணமாக நிகழ்ந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல், அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபடும் வாகன சாரதிகள் நெடுஞ்சாலைகளில் கைது செய்யப்படுவதாக பொலிஸ் அதிகாரிகள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன் 2021 ஆம் ஆண்டில் அவர்களுக்கு எதிராக 79 ஆயிரத்து 904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 66 ஆயிரத்து 252 என்றும் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் பணியாற்றும் பொலிஸார் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

மேலும் அதிவேக வீதிகளில் ஓய்வறைகளை அமைப்பது தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: