நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது – விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, January 12th, 2022

எந்தவிதமான நிலைமையிலும், நாட்டரிசி 105 ரூபாவை விட அதிக விலைக்கும், சம்பா அரிசி 130 ரூபாவை விடவும் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்படாத வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வரத்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில், இந்தியாவிலிருந்து இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியையும், ஒரு இலட்சம் மெற்றிக் தொன் சம்பா அரிசியையும், தனியார் துறையின்றி, அரச வணிக கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனவே, செயற்கையாக, அநீதியான முறையில், விலை அதிகரிப்பை மேற்கொள்ளத் திட்டமிடுபவர்களுக்கு, அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது.

அதேவேளை, சீன – இலங்கை, இறப்பர் – நெல் ஒப்பந்தத்தின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு, சந்தையில் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த ஒரு தொகை அரிசியை பெற்றுக்கொள்ள முடியுமா? என்பது தொடர்பில் சீனத் தூதுவர் உட்பட சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பார்ப்பதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட அரசாங்கத்தால் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே

மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்குவதற்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதன்படி, இந்தியாவிலிருந்து 300 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை விரைவாக இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

சம்பா அரிசிக்குப் பதிலாக இரு இலட்சம் மெற்றிக் தொன் நாட்டு அரிசியும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் GR 11 அரிசியும் இறக்குமதி செய்யப்படும்.

வெளிச்சந்தையில் போதுமான அளவு அரிசி இருப்பை பேணும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: