நீர்வேலி கோர விபத்து: இருவரின் மரணத்திற்கு காரணமான சாரதிக்கு 2 வருட கடூழிய சிறை!

Monday, April 29th, 2019

சிறுமி உள்ளிட்ட மூவரின் உயிரிழப்புக்கு காரணமாகவிருந்த வாகன சாரதிக்கு கடுமையான தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தீர்ப்பளித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் முச்சக்கர வண்டியும் ஹைஏஸ் வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் பயணித்த ஹைஏஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியின் தடம் மாறி முச்சக்கர வண்டியை மோதித் தள்ளியது. அதனால் முச்சக்கர வண்டி அருகிலுள்ள வயலுக்கு தூக்கி வீசப்பட்டது.

விபத்தில் சிறுமி ராஜ்குமார் டனிஷ்ரா (6) மற்றும் அவரது பாட்டனார் சிங்காரவேலு பாஸ்கரன் (57) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முச்சக்கர வண்டிச் சாரதி ஜெயபாலன் துரைபாலசிங்கம் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்தி மூவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தமை, கவயீனமாக வாகனத்தைச் செலுத்தியமை, ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தடுக்கத் தவறியமை ஆகிய 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சாரதிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பொலிஸார் தாக்கல் செய்தனர். குற்றச்சாட்டுக்களை சாரதி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

விபத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்து மூவரின் உயிரிழப்பை ஏற்படுத்தியமைக்கு குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், விபத்தில் உயிரிழந்த சிறுமி மற்றும் அவரது பாட்டனாரின் குடும்பத்துக்கு எதிரி 5 லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை வழங்கத் தவறின் ஒரு வருட சிறைத் தண்டனையை எதிரி அனுபவிக்க வேண்டும்.

உயிரிழந்த முச்சக்கர வண்டிச் சாரதிக்கு 3 இலட்சம் ரூபா பணத்தை எதிரி இழப்பீடாக வழங்கவேண்டும். அதனைச் செலுத்தாவிடின் ஒரு வருட சிறைத் தண்டனையை எதிரி அனுபவிக்க நேரிடும். மேலும் 3 குற்றங்களுக்காக எதிரி தலா 2 ஆயிரத்து 500 ரூபா வீதம் 7 ஆயிரத்து 500 ரூபாவைத் தண்டமாகச் செலுத்தவேண்டும்

எதிரியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை நிரந்தரமாகத் தடை செய்யும் ஆணை மோட்டார் போக்குவரத்துத திணைக்களத்துக்கு நீதிமன்று வழங்குகிறது என்று நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் தண்டனைத் தீர்ப்பளித்தார்.

Related posts: