நீர்ப்பாவனைக்கு சட்டம் வேண்டும் – பொறியியலாளர் சர்வராஜ் கோரிக்கை!

Friday, March 23rd, 2018

நீர் வளம் தொடர்பாக ஆரம்பக் கல்வியிலேயே கற்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று நீர்ப் பாவனை தொடர்பான இறுக்கமான நடைமுறைகளை கொண்டு வரவேண்டும். இவ்வாறு நீர்ப் பாசனத் திணைக்கள பொறியியலாளர் எஸ். சர்வராஜ் தெரிவித்தார்.

புவியியல் பட்டதாரிகள் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர்மூலங்களைப் பாதுகாப்பதற்கும் பேணுவதற்குமான உபாயங்கள் என்ற தலைப்பில் நல்லூர் பிரதேச செயலகத்தில்  இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்விலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

எமது மக்கள் குடிதண்ணீரின் அருமை தெரியாது நாளாந்தம் அதனை வீணாக்கி வருகின்றனர். இதனை தடுக்க நாம் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த நிலையை முற்றாக மாற்ற வேண்டுமானால் நாம் நீர்வளம் தொடர்பாக ஆரம்பக் கல்வியில் இருந்து எமது இளைய சமுதாயத்துக்கு கற்பிக்க வேண்டும். அதற்குப் பாடத்திட்டத்தில் அதனைப் புகுத்தி அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இதன் ஊடாக நாம் எதிர்காலச் சந்ததிகளுக்கு நீரின் பெறுமதியை உணர்த்த முடியும்.

எமது பிரதேசங்களில் நீரின் பயன்பாட்டினை கட்டுப்படுத்த சட்ட ஏற்பாடுகள் இல்லை. இதனால் அளவுக்கு அதிகமாக நாளாந்தம் நீர் பாவிக்கப்படுகின்றது. வெளிநாடுகளைப் போல நீர்ப் பாவனை தொடர்பாக இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும். பொதுவாக வெளிநாடுகளில் நீரினைப் பாவிக்க வரையறுக்கப்பட்ட அளவே வழங்கப்படும். அவர்கள் தமது பாவனையின் வீதத்தினை அறிந்து செயற்படக் கூடிய வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறான முறை இங்கும் வரவேண்டும் என்றார்.

Related posts: