நீர்ப்பாசன சுபீட்சம் திட்டத்தின் வட மத்திய மாகாண கால்வாய் அபிவிருத்தி செயற்றிட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Friday, February 5th, 2021

நீர்ப்பாசன சுபீட்சம் திட்டத்தின் கீழ் வட மத்திய மாகாண பாரிய கால்வாய் அபிவிருத்தி செயற்றிட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் – பலுகஸ்வெவ, மஹமீகஸ்வெவ பகுதியில் இந்த திட்டம் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன சுபீட்சம் திட்டத்தின் கீழ் இந்த வருடமும் அடுத்த வருடமும் 5000 சிறு குளங்களை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் இந்த வருடத்திற்குள் கிராமங்களிலுள்ள 1000 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

அத்துடன் நீர்பாசன அமைச்சு, விவசாய திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வட மத்திய கால்வாய் கட்டமைப்பிற்குரிய சுரங்க நிர்மாணம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சுமார் 28 கிலோமீட்டர் நீளம் கொண்ட சுரங்கக் கால்வாய் இதனூடாக அமைக்கப்படவுள்ளது.

சுரங்க நிர்மாணம் நிறைவடைந்ததும் 94 கிலோமீட்டர் நீளமான கால்வாய்த் திட்டம் பூர்த்தி செய்யப்படவுள்ளது. மொரகஹகந்த தொடக்கம் மஹகனந்தராவ வரையில் இந்த  கால்வாயினூடாக நீரை கொண்டு செல்ல முடியும் என நீர்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் நான்கு வருடங்களில் நிறைவு செய்யக்கூடிய விரைவான செயற்றிட்டமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பாரிய குளங்கள் சிலவற்றிற்கும் இதனூடாக நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

வவுனியா, மாத்தளை, அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள பல பகுதிகளுக்கும் இதன் மூலம் நன்மை கிட்டவுள்ளதாகவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே நீர்ப்பாசன சுபீட்சம் திட்டத்தின் கீழ் வடமேல் கால்வாய் அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி பிரதமரின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: