நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும் – தொடர்ந்து இரு தினங்களுக்கு 200 நிமிட மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!
Saturday, April 23rd, 2022நாட்டில் தற்போது பெய்துவரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகபட்ச கொள்ளளவை எட்டும் வரை மின்சார விநியோகத்தை அவ்வப்போது நிறுத்த வேண்டியிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது 25 சத வீத மின்சாரம் நீர் மின் நிலையங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து 900 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படுமெனவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் டி.சி.ஆர். அபேசேக்கர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
அதனடிப்படையில் நாட்டில் இன்றும் நாளையும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இன்றையதினம் 3 மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிப்படவுள்ளது. A முதல் W வரையான வலயங்களில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன் நாளையதினம் 3 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 9 மணிமுதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|