நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம் – நீதியமைச்சர் தகவல்!
Sunday, April 9th, 2023உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரேயே சட்டவரைபில் அவசியமான திருத்தங்களைச் செய்யமுடியும் என்பதால், அவ்வறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கப்போவதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இருப்பினும் கடந்த ஆண்டு ஜனாதிபதியிடம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்த நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு, இன்னமும் அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில், அந்த ஆணைக்குழுவுக்குரிய ஆணை எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான பணிகள் எதனை அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவருகின்றன? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரேயே சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்களைச் செய்யமுடியும் என்றும், எனவே ஆணைக்குழுவின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் நோக்கம் குற்றமிழைத்தவர்கள் தமது தவறை உணர்ந்து ஆணைக்குழுவின் முன்னிலையில் மன்னிப்புக்கோரவேண்டும் என்பதேயாகும் என்று தெரிவித்த அவர், அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினர் அவர்களை மன்னிப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்றும், அதற்கு அவர்களை இணங்கச்செய்யவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு தென்னாபிரிக்காவில் நிறுவப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்குத் தலைமைதாங்கிய டெஸ்மன்ட் டுட்டூ போன்ற ஒருவரே எமது நாட்டில் நிறுவப்படக்கூடிய ஆணைக்குழுவுக்கும் அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளை பாதிக்கப்பட்ட தரப்பினர் மன்னிப்பு வழங்குவதற்கு இணங்காத சம்பவங்கள் தொடர்பில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும், இதேபோன்ற 154 வழக்குகள் தென்னாபிரிக்காவில் நிலுவையில் இருப்பதாகவும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|