நிலக்கண்ணிவெடிகள் சவாலாக உள்ளது – கிளிநொச்சி மாவட்ட செயலர்!

Tuesday, September 5th, 2017

முகமாலைப் பகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகள் பாரிய சவாலாக காணப்படுவதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும் யுத்த சூனிய பிரதேசமாகவும் காணப்பட்ட முகமாலைப் பகுதியில் தொடர்ந்தும் வெடிபொருள் அச்சம் காணப்படுகின்றது. இவ்வாறு இப்பகுதியில் வெடிபொருட்களில் சிக்கி பெறுமதி மிக்க மனித உயிர்கள் செல்லப்படுவதுடன் பலர் தமது உடல் அபயங்களையும் இழக்க நேரிடுகின்றது.

வெடிபொருட்கள் பற்றிய விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், இவ்வாறான பாதிப்புக்களில் இருந்து மக்கள் விடுவதாக இல்லை எனப் பல்வேறு தரப்புக்களும் தெரிவிக்கின்றன.இவ்வாறு வெடிபொருள் ஆபத்துக்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள், இவ்விடயம் அனைவருமே கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஓர் விடயமாகும்.

முகமாலை பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இவ்வாறான வெடிபொருள் அகற்றும் பணிகளை துரிதமாக செய்ய முடியாத நிலையிலும் அவர்கள் தங்களால் இயன்றளவு முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அதாவது கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் சிலர் மீண்டும் கண்ணி வெடிகளை புதைத்து மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பில் சரியான ஒருமுடிவை அல்லது தீர்வை எடுக்க வேண்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கும் போது இந்தப் பகுதிகளில் வெடிபொருட்கள் பெரும் சவால்களாக காணப்படுகின்றன.

இதனைவிட இப்பகுதிகளில் இன்னமும் வெடிபொருட்கள் அகற்றப்படாத மிகவும் ஆபத்தான பகுதிகளில் கைவிடப்பட்ட காவலரண்களில் உள்ள மரக்குற்றிகள் இரும்புகள் என்பவற்றை பலர் எடுத்து வருகின்றனர்.

இதேவேளை கண்ணவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கும் பகுதிகளில் வெடிபொருள் ஆபத்துக்களுக்கு இடும் பதாதைகள் குறியீடுகள் என்பவற்றையும் சேதப்படுத்தியும் அவற்றை எடுத்தும் செல்கின்றனர்.இதனால் மறுநாள் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அதனை சீர் செய்வதற்கு பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வெடிபொருள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய ஆபத்தான பகுதிகளுக்கு பொலிசாரின் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்ற அவசியத்தை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: