நிறைவேறியது ஈ.பி.டி.பியின் கோரிக்கை : காப்பெற் வீதியாக புதுப் பொலிவுபெறுகிறது ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை வீதி – தவிசாளர் ஜெயகாந்தன்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெரு முயற்சியால் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை கிராம வீதியை திருத்துவதற்கான அனுமதி மத்திய அரசால் வழங்கப்பட்டு அதற்கான 9 கோடி 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளரும் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் விசேட உட்கட்டமைப்பு ஊடாக குறித்த நிதி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை கிராம மக்கள் நீண்டகாலமாக தமது போக்குவரத்துகளின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் குறித்த வீதியின் அபிவிருத்தியின் அவசியம் குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
மக்களது தேவைகளை உணர்ந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் மத்திய அரசுடன் கொண்டுள்ள நல்லுறவு காரணமாக குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான முயற்சிகளை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஊடாக மேற்கொண்டதன் பயனாக அந்த அமைச்சின் விசேட உட்கட்டமைப்பு நிதியினூடாக 9 கோடி 30 இலட்சம் ரூபா நிதி குறித்த வீதியின் புனரமைப்புக்காக தற்போது ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இதனூடாக குறித்த வீதி புனரமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதுடன் வீதி மிக விரைவில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|