நிறைவுக்கு வந்தது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அடையாள பணிப் பகிஷ்கரிப்பு!

Tuesday, December 8th, 2020

13 தொழிற்சங்கங்களை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலன்னறுவை தேசிய சரணாலயம் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தி நேற்று (07) காலை 08 மணி முதல் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க பொலன்னறுவையில் வழங்கிய பதிலை அடிப்படையாகக் கொண்டு, இரண்டாவது தடவையாகவும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பணிப்பகிஷ்கரிப்பினால் தேசிய சரணாலயங்கள் பலவற்றின் நடவடிக்கைகள் நேற்று இடம்பெறவில்லை. நுழைவுச்சீட்டு வழங்கும் கருமபீடங்கள் மூடப்பட்டிருந்ததுடன், பார்வையிட சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எவ்வாறாயினும், தமது பிரச்சினைகள் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தமது அடையாள பணிப்பகிஷ்கரிப்பை இன்றுடன் (08) நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: