நிறைவடைந்தது வேட்பு மனுத் தாக்கல் – சஜித் விலகல் – மும்முனைப் போருக்கு தயாராகும் இலங்கை – புதிய ஜனாதிபதி தெரிவுக்காக நாளை 10 மணிக்கு கூடுகின்றது நாடாளுமன்றம்!

Tuesday, July 19th, 2022

இலங்கையின் புதிய அதிபர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.

இதனையடுத்து நாளையதினம் அதிபர் தேர்தலுக்கான இரகசிய வாக்கெடுப்பு இடம் பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில், வேட்பு மனு கோரல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தெரிவத்தாட்சி அதிகாரியாக நாடாளுமன்ற பொது செயலாளர் தம்மிக்க தசநாயக்க செயற்பட்டிருந்தார்.

இந்நிலையில், புதிய வேட்பாளர்களாக டலஸ் அழகப்பெரும, ரணில் விக்ரமசிங்க, அனுர குமார திசாநாயக்க ஆகியோர் போட்டியிடவுள்ளளனர்.

மேலும் இன்றைய வேட்பு மனுத் தாக்கலின் போது டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.

மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தினேஸ் குணவர்தன முன்மொழிய அதனை மனுஷ நாணயக்கார எம்.பி. வழிமொழிந்தார்.

இதேநேரம், அனுர குமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் எம்.பி முன்மொழிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இன்று(19) முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபயவின் பதவி விலகலை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதில் அதிபராக பதவியேற்றார்.

இதனை தொடர்ந்து சனிக்கிழமை (16) நாடாளுமன்றம் கூட்டப்பட்டு முன்னாள் அதிபர் கோட்டாபயவின் பதவி விலகல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபருக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று(19) இடம்பெறும் என்றும், நாளை(20) இரகசிய வாக்கெடுப்பு மூலம் இலங்கையின் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையின் நாடாளுமன்றில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச  போட்டியிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவுக்காக நாளை முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: