நிர்ணய விலையில் விற்பனை செய்ய முடியாது- வர்த்தகர்கள் அறிவிப்பு!

Friday, July 15th, 2016

நேற்றையதினம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிர்ணய விலைக்கு அத்தியவசியப் பொருட்கள் சிலவற்றை விற்பனைசெய்ய முடியாது என அத்தியவசிய பொருள் இறக்குமதியாளர் சங்கம் மற்றும் மொத்த விற்பனை வர்த்தகர் சங்கம் ஆகியன அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனி, மைசூர் பருப்பு உள்ளிட்ட 16 அத்தியவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையொன்றை அறிவித்த அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்த நிலையிலேயே மொத்த விற்பனையாளர் சங்கத்தினர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

குறித்த நிர்ணய விலைக்கு சில பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமென்றால் அவற்றுக்கு தமக்கு மானியம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அத்தியவசிய உணவ மற்றும் ஏனைய பொருட்களை இறக்குமதி செய்யும் மொத்த விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக சீனி மற்றும் கடலை போன்றவற்றை அரசின் நிர்ணய விலைக்கு விற்க முடியாது என இறக்குமதி மற்றும் மொத்த விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்..

ஒரு கிலோ சீனியை இறக்குமதி செய்வதற்கு தமக்கு 115 ரூபா செலவாவதாகவும் கூறும் செனவிரத்ன, அதில் 30 ரூபா அரசின் வரி என்றும் தெரிவித்தார். இதனால் குறித்த வரியை அரசாங்கம் நீக்குமானால் 85 ரூபாவிற்கு தம்மால் ஒரு கிலோ சீனியை இறக்குமதி செய்து அரசின் நிர்ணய விலையான 95 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலைக்கு கடலையை இறக்குமதி செய்ய முடியாது என்றும் அவர் தெரிவிக்கின்றார். அத்துடன் இவ்வாறு பொருட்களுக்கு நிர்ணய விலையை அறிவித்துள்ளதன் மூலம் சில்லறை வியாபாரிகள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இறக்குமதி மற்றும் மொத்த விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வலாறாயினும் சீனி, மைசூர் பருப்பு, கடலை, பால்மா உள்ளிட்ட 16 அத்தியவசிய பொருட்களுக்கான நிர்ணய விலைப் பட்டியில் நேற்று நள்ளிரவு விசேட வர்த்தமானி மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் நிர்ணய விலைக்கு பொருட்களை விற்க தவறும் வியாபார நிலையங்களை சுற்றுவளைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: