நிரந்தர நியமனங்களின் போது உள்வாங்கப்படாத வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள் ஒரு தொகுதியினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு!

Friday, March 13th, 2020

என்றோ ஒருநாள் நாம் பணியாற்றிவரும் தொண்டர் ஆசிரியர் பணிநிலை எமக்கு நிரந்தர குடும்ப வருமானத்துக்கான தொழில் வாய்ப்பாக அமையும் என்ற நோக்குடன் தன்னார்வத் தொண்டராக நாம் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் இதுவரை அந்த தொழில் நிலை நிரந்தரமானதாக்கப்படாமையால் நாளாந்தம் பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகின்றோம் என நியமனங்களின்போது உள்வாங்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் தமது குடும்ப நிலை கருதி குறித்த பதவி நிலையை நிரந்தரமானதாக பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருதொகுதி பாதிக்கப்பட்ட  தொண்டர் ஆசிரியர்கள் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தீவக பிரதேச ஒருங்கிணைப்பாளருமான வேலும்மயிலும் குகேந்திரன் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி தமது பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்தனர்.

இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டராசிரியர்களாக தாம் பணியாற்றிவருகின்ற போதிலும் தமக்கான நிரந்தர நியமனங்களின் போது தகுதி நிலை மற்றும் தகைமைகள் இருந்தும் தாம் விலத்தப்பட்டுவருகின்ற நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு பாதிப்படைந்து சுமார் 290 இற்கும் சற்று அதிகமானோர் இருக்கின்றோம். நாம் அனைவரும் இந்த தொண்டர் ஆசிரியர்  பதவிநிலை நிரந்தரமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சேவையாற்றி வருகின்றோம். ஆனாலும் அது இதுவரை கைகூடாத நிலைமையே தொடர்கின்றது. எனவே வமது நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்களின் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட வேலும்மயிலும் குகேந்திரன் காலக்கிரமத்தில் இது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

Related posts: