நிபுணர்கள் குழுவின் தீர்மானத்தை சகலரும் ஏற்க வேண்டும் – கொரோனாவால் மரணமாகும் நபர்கள் விவகாரம் தொடர்பில் இராணுவ தளபதி வலியுறுத்து!

Monday, December 28th, 2020

கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களின் உடல்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் தீர்மானத்திற்கு அனைத்து தரப்பினரும் இணங்க வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளர்.

அத்துடன் குறித்த நிபுணர்கள் குழு வழங்கிய பரிந்துரைக்கு அமைய செயற்பட வேண்டியது அனைத்து பிரஜைகளினதும் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என குறித்த நிபுணர்கள் குழு பரிந்துரைத்திருந்தது. எனினும் கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் 4 பேர் மரணமடைந்தனர்.

அதேவேளை இலங்கையில் இறுதியாக 674 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையுடன் இலங்கையில் இதுவரை 41 ஆயிரத்து 54 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதே நேரம் இவர்களில் 32 ஆயிரத்து 701 பேர் தொற்றில் இருந்து முற்றாக குணமடைந்துள்ளனர். மேலும் 8 ஆயிரத்து 162 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: