நாவாந்துறை பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – ஈ.பி.டி.பி மாநகர சபை உறுப்பினர்கள் யாழ். பிரதேச செயலரிடம் கோரிக்கை!

Friday, July 12th, 2019

நாவாந்துறை நித்திய ஒளி, சூரிய ஒளி பகுதிகளில் வாழும் மக்களின் எதிர்காலம் கருதி அவர்கள் வாழும் இடங்களுக்கான காணி உரிமங்களை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர உறுப்பினரும் முன்னாள் பிரதி மேயருமான றீகன் (இளங்கோ) யாழ்ப்பாணம் பிரதேச செயலரிடம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாநகருக்குட்பட்ட நாவாந்துறை J/85 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பகுதி மக்களின் அபிவிருத்தி தொடர்பாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஒன்று அப்பகுதி மக்களை நாவாந்துறை சென் மேரிஸ் சனமூக நிலையத்தில் சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்தனர்.

இதன் போதே யாழ் மாநகரின் முன்னகாள் பிரதி மேயர் றீகன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாவாந்துறை பகுதியின் நித்திய ஒளி, சூரிய ஒளி பகுதிகளில் வாழும் மக்கள் பல காலமாக தமது காணிகளுக்கான உரிமங்களை பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பல அரச மற்றும் தனியார் அமைப்புகளால் வழங்கப்படும் சலுகைகளை இழக்கும் நிலை காணப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது தமது சொந்த முயற்சிகளால் கூட நிரந்தர வாழிடங்களை அமைக்க முடியாதிருக்கின்றனர். இந்த மக்களது பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கான காணி உரிமங்களை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் இப்பகுதியில் ஒரு இடிதாங்கியும் அமைக்கப்பட்டு மழை காலங்களில் மின்னல் தாக்கங்களால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனிடையே குறித்த பகுதிக்கான போக்குவரத்து வசதிகள் மிக குறைவாக காணப்படுவதால் போக்குவரத்து சேவையை துரித கதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேசத்திற்குரிய யாழ் மாநகர சபை உறுப்பினரான வாசு வலியுறுத்தினார். அத்துடன் தொழிலாளர்களது நலன்களை கருத்தில் கொண்டு பொது நோக்கு மண்டபம் ஒன்றும் இப்பகுதியில் அமைக்கப்பட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மழை காலம் வரவுள்ளதால் குறித்த பிரதேசத்தில் காணப்படும் கழிவு நீர் வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்ட வேண்டும் என்று  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மற்றுறொரு மாநகர சபை உறுப்பினரான மரியதாஸ் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: