நாவற்குழியில் எவ்வித குடியேற்றங்களும் இனி வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது – யாழ். அரச அதிபர் அறிவிப்பு!
Tuesday, January 31st, 2017
நாவற்குழியில் எவ்வித குடியேற்றங்களும் இனி வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவித்த யாழ். அரச அதிபர் ஏற்கனவே இங்கு குடியேறிய மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் படிப்படியாக விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக மேற்குப் பகுதியில் உள்ள தமிழ், சிங்கள மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டத்திற்கான கல் நாட்டும் வைபவம் நேற்றையதினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான நாவற்குழி மேற்குப் பகுதியில் உள்ள காணியில் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் தமது அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கைகளை முன்வைத்து இருந்தனர். அந்த அடிப்படையிலேயே தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக 5லட்சம் ரூபா பெறுமதியில் நன்கொடையாக இந்த வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் அத்துமீறி குடியேறியிருந்த மக்கள் இப்பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 200தமிழ் குடும்பங்கள் 50சிங்கள குடும்பங்களும் இந்த வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இங்கு குடியமர்ந்துள்ள மக்களுக்கே வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது, புதிதாக எந்தவொரு குடியேற்றங்களும் இப்பகுதிக்குள் அனுமதியளிக்கப்படமாட்டாது. தற்போது வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை தொடர்ந்து அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|