நாளை வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பு!

உயர் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக இலங்கையை முன்னேற்றுவது என்ற இலக்கை நோக்கி நகர்த்தும் வகையில் 2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாளை (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளது. சுதந்திர இலங்கையின் 70ஆவது வரவுசெலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ரவி கருணாநாயக்க சபையில் முன்வைக்கின்றார்.
1988ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நிதியமைச்சராகவிருந்த ரொனிடிமெல்லுக்குப் பின்னர் அமைச்சர் ரவி கருநாணக்க வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவிருக்கின்றார்.
கடந்த பல வருடங்களாகக் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான வழியை ஏற்படுத்தும் வகையில் 2017 வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏற்றுமதித்துறையில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்து அத்துறையில் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான யோசனைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
“மக்களுக்கு குறுகிய காலம் மற்றும் நீண்டகால நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் சகல துறைகள் பற்றியும் வரவுசெலவுத் திட்டத்தல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் கூறினார். 9.9 ரில்லியனுக்கும் அதிகமான பொதுக்கடன் காணப்படுகிறது. இது மாத்திரமன்றி பதிவுகள் இல்லாத 1.2 பில்லியன் கடன் காணப்படும் நிலையில் நிதி நிர்வாகத்தை மேற்கொள்வது மிகவும் கடினமானது.
இருந்தபோதும் வரவுசெலவுப் பற்றாக்குறையை குறைப்பதற்கான சகல திட்டங்களையும் இந்த பட்ஜட் முன்னெடுத்துள்ளது.
2020ஆம் ஆண்டு நிதிப் பற்றாக்குறையை உள்நாட்டு உற்பத்தியில் 3.5 வீதமாகக் குறைப்பதை இலக்காகக் கொண்டு செயற்படுகிறது. அடுத்த வருடம் 4.7 வீதமாக இது குறைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படும்.
நிதி அமைச்சர் இதனை வாசிப்பார். இதனைத் தொடர்ந்து நாளைமறுதினம் முதல் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.
Related posts:
|
|