நாளைமுதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்!
Sunday, April 19th, 2020நாளைமுதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்காக பேருந்துகள், புகையிரதங்கள் கிருமி நீக்கப்பட்டு, இன்று தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. 5000 இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் 400 புகையிரத சேவைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு பேருந்தில் பயணிக்க கூடியவர்களின் அரைவாசி பங்கினரையே பேருந்தில் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் துறையினரும் நாளைமுதல் சேவையில் ஈடுபடுகிறார்கள். முதல் 40 நாட்களிற்கு ஒரு ஆசனத்தில் ஒரு பயணி மாத்திரமே உட்கார அனுமதிக்கப்படுவார் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னே தெரிவித்தார்.
இதனிடையே நாளையதினம் மீளவும் இயக்கப்படவுள்ள புகையிரதங்களில் தொழில்சார் அடையாள அட்டைகள் மற்றும் புகையிரத பருவச்சீட்டு உள்ளவர்களுக்கு மாத்திரமே பயணிக்க முடியுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் காய்ச்சல, இருமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் புகையிரத சேவையினை பயன்படுத்த வேண்டாம் என புகையிரத திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் அலுவலக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகள் பயணச்சீட்டை பெறும் போது ஒரு மீற்றர் இடைவெளியில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பிரனாந்து தெரிவித்துள்ளார்.
மேலும் – நாளைமுதல் புகையிரத சேவைகள் சுகாதார துறையினரின் ஆலோசனைகளின் பிரகாரம் பாதுகாப்பான முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளன. பயணச்சீட்டு விநியோகிப்பது தொடக்கம் புகையிரத நிலைய சாதாரண செயற்பாடுகளுக்காகவும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புகையிரதத்தின் ஒரு பெட்டியில் 50 பேர் மாத்திரமே பாதுகாப்பான முறையில் பயணிக்க முடியும்.
பயணிகள் புகையிரத நிலையத்துக்குள் உள்வரும் போதும், புகையிரத்தில் பயணிக்கும் போதும் முக பாதுகாப்பு கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
அத்துடன் புகையிரத நிலையத்திற்குள் எச்சில் துப்புவதும், தேவையற்ற விதத்தில் நடமாடுவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழிமுறைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தினால் அத்தியாவசிய சேவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் துறையினர் மாத்திரம் அலுவல புகையிரதங்களில் பயணம் செய்ய முடியும் எனினும் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள சாதாரண மக்கள் அலுவலக புகையிரதங்களில் பயணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|