நாளாந்தம் 932.4 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுடன் கலக்கின்றது – சுற்றாடல் அமைச்சு எச்சரிக்கை!
Sunday, April 9th, 2023இலங்கையில் நாளாந்தம் 932.4 மெற்றிக் டன் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுடன் கலப்பதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில், 300.30 மெற்றிக் டன் பிளாஸ்ரிக் சேகரிக்கப்படுவதாகவும், 632.12 பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலில் விடப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அவ்வாறு சூழலில் வீசப்படுகின்ற 419.47 மெற்றிக் டன் பிளாஸ்ரிக், எரிக்கப்படும் நிலையில், 38.48 மெற்றிக் டன் பிளாஸ்ரிக் கழிவுகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.
மீள்சுழற்சி செய்யும் பிரதான நிறுவனங்களுக்கு உரிய முறையில் குறித்த கழிவுப் பொருட்கள் சென்றடையவில்லை என சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுச் சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, மீள்சுழற்சி செய்முறைகளை வலுப்படுத்தும் வகையில், நாடளாவிய ரீதியில் பிளாஸ்ரிக் கழிவு சேகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, குளிர்பானம் அருந்த ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தி அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்ரிக் ஸ்ரோ உள்ளிட்ட பொருட்கள் சிலவற்றிற்கு இறக்குமதி தடை விதிக்கப்படவுள்ளது. இந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகவுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் வெளியானது.
இதன்படி, ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்ரிக் பீங்கான்கள், பானக் கோப்பைகள் முள்ளுக்கரண்டிகள், கத்திகள் என்பவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படவுள்ளது.
அத்துடன், பிளாஸ்ரிக் இடியப்ப தட்டு, பிளாஸ்ரிக் மாலைகள் என்பவற்றை இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|