நாளாந்தம் அதிகரிக்கு கொரோனா தொற்று: பல கிராமங்களை முடக்க தீர்மானம்- இலங்கையின் நிலைமை தொடர்பில் எச்சரிக்கும் சுகாதாரத் தரப்பு!

Tuesday, April 28th, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை இன்னும் சில தினங்களுக்குள் ஆயிரத்தை தாண்டும் நிலை உருவாக வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் நேற்றும்மட்டும் 63 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இலங்கையில் ஒரே நாளில் பதிவாக அதிக எண்ணிக்கையாகும் இதையடுத்து இன்றும் பலர் குறித்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதை அடுத்து இலங்கையின் தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவரை 596 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் நடத்தப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். நேற்று மாத்திரம் இலங்கையில் 1500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் இலங்கையில் இது வரையில் 592 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 455 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 134 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க ஜாஎல சுதுவெவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட போதை பொருளுக்கு அடிமையான கொரோனா நோயாளியினால் முழு நாடுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த நோயாளி கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். திருட்டு சம்பவம் ஒன்றிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட இவர் பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் சில நோய் நிலைமையில் காணப்பட்டமையினால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் இறுதியில் அவர் தென்கொரியாவின் 31வது பெண் நோயாளி போன்றாகிவிட்டார். குறித்த தென்கொரிய பெண் தனக்கு கொரோனா நோய் தொற்றியிருந்த நிலையில் 9000 பேர் பங்குபற்றி தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டர். அவர்களில் 3000 பேர் இந்த நோய் தொற்றிற்குள்ளாகியுள்ளார். இந்த நிலைமையும் அவ்வாறு தான் உள்ளது. இந்த நோயாளி கைது செய்யப்பட்ட பின்னர் 12 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

முழு கிராமத்தையே முடக்க நேரிட்டது. இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தங்கள் கடமையை சரியாக செய்துள்ளனர். எனினும் 206வது நோயாளியினால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனோ தொற்றுக்குள்ளான வவுனியா கடற்படை வீரருடன் தொடர்பினை வைத்திருந்த 75பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்றிருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நபருடன் தொடர்புகளை பேணியவர்கள் சுகாதார பிரிவு மற்றும் பொலிசாரால் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண குணமடைந்துள்ளார். அவர் இன்று யாழ்.போதனா வைத்திய சாலையின் அம்புலன்ஸ் வண்டியில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படுவார் என வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்குறித்த நபர் தொடர்ந்து 14 நாட்கள் அவருடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார். யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 ஆவது நபரும் குணமடைந்துள்ளார் என்றும் வைத்திய சாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: