நாம் பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் வேலணை பிரதேச சபை பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது – தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Wednesday, March 6th, 2019

சபையில் உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் அனைத்தும் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆனாலும் சில பிரேரணைகள் துறைசார் தரப்பினரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும் அதற்கான பதில்கள் கிடைக்கப் பெறாமையால் அவற்றை செயற்படுத்துவதில் தாமதங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் விரைவில் அதற்கான தீர்வுகளை காண முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் கடந்த ஆறு மாதகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட பிரேரணைகள் மற்றும் அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை மீளாய்வு  செய்யும் வகையில் விஷேட கூட்டம் தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பான பிரச்சினை, சாட்டி கடற்கரை படகுச் சவாரி பிரச்சினை, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழுப்புணர்வு, சனசமூக நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதற்கான ஆலோசனைகளையும் சபையின் உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்தபின் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் –

சபையை நாம் பொறுப்பேற்றுக்கொண்ட இதுவரையான ஒருவருட காலப்பகுதியில் 155 பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அவற்றுள் 146 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன் எமது பிரதேசத்தில் காணப்படும் குடிநீருக்கான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட பல்வேறு நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். அத்துடன் எமது சபைக்கு இரண்டு 10 சக்கரங்களைக் கொண்ட குடிநீர் பவுசர்களையும் பெற்றுள்ளோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளின் ஒப்பீட்டு தகவல்களின் அடிப்படையில் நாம் பொறுப்பேற்றுக்கொண்ட 2018 ஆம் ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிக வளர்சி கண்டுள்ளது என்து என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் தெரியப்படுத்துகின்றேன். இது எமது சபையின் ஆழுமைக்கு கிடைத்த வெற்றியாகும் என தெரிவித்த அவர் பச்சை புகையிலை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலும் துறைசார் தரப்புகளுடன் பேசி அதற்கான தீர்வுகளை காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Related posts: