நான் சமூகங்களுக்கிடையில் ஒரு பாலமாக இருக்க விரும்புகிறேன் – குற்றச்சாட்டுகளை யோசித்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை – புதிய நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, August 22nd, 2020

அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி பொருட்படுத்தி, யோசித்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உங்களை விமர்சிப்பவர்களுக்கு நீங்கள் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  அவர், 2012 முதல் நான் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியாக இருக்கிறேன். சட்டத்தரணியாக மட்டும் 25 வருடங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளேன்.

அரசியலமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம், கிரிமினல் சட்டம் மற்றும் சிவில் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வரும் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் மாகாண நீதிமன்றங்களில் நான் தோற்றியிருக்கிறேன்.

எனது தொழில் துறையின் தொழில்சார் பங்களிப்பு இதுவாகும். அத்துடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவராக இரண்டு வருட காலம் பதவி வகித்துள்ளேன்.

மத மற்றும் சமூக நல்லிணக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாத சிலரே இவ்வாறு விமர்சனம் செய்து வருகின்றனர். நான் சமூகங்களுக்கிடையில் ஒரு பாலமாக இருக்க விரும்புகிறேன். எனது சட்டத்தொழிலை கைவிட வேண்டியுள்ளது.

எனினும் இந்தப் பாதையில் நான் விரும்பியே நடக்கின்றேன். நாட்டின் நன்மைக்காகவே நான் இந்த அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றேன்.

நீதி அமைச்சில் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ளன. எனவே அந்த அமைச்சை பெற்றுக் கொண்டதை மிகுந்த சவாலுக்குட்பட்டதாகவே நான் கருதுகிறேன்.

நான் அந்த சவால்களை எதிர்கொள்ளக் கூடியவன் என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருந்திருக்கக் கூடும். அதனால்தான் அவர்கள் நீதி அமைச்சராக என்னை தெரிவு செய்துள்ளார்கள்.

ஜனாதிபதியின் தலைமையினாலான அமைச்சரவை தீர்மானிக்கும் வகையில் அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.

அரசாங்கத்தின் அங்கீகாரம் இன்றி நான் எதையும் செய்து விட முடியாது. அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதே எனது வேலையாகும்.

அந்தவகையில் அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி பொருட்படுத்தி, யோசித்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: