நாட்டை முடக்குவதற்கு எவ்வித தேவையும் ஏற்படவில்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா !

Tuesday, July 14th, 2020

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அங்கிருந்த அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளவர்கள் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா தவிர்ப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமையினால் நாட்டை மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.   கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனம் காணப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் சகலரும் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு நிலைமை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா நோயாளர் அடையாளம் காணப்படுவார்களாயின் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் புலனாய்வு பிரிவினர் 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் சில பகுதிகளில் எதிர்காலத்தில் மேலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட வாய்ப்புகள் உள்ளன. அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: