நாட்டை திறப்பதற்குரிய சாதகமான நிலமை இன்னமும் ஏற்படவில்லை – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021

நாட்டில் தினசரி பதிவாகும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சாதகமான சூழ்நிலை காணப்படவில்லை என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், ஹேமந்த ஹேரத் நாட்டை முழுமையாக திறப்பதற்கான சுகாதார சூழ்நிலை இன்னமும் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைய நாள்களில் பதிவாகும் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, நாட்டை மீண்டும் திறப்பதற்கான ஒரு சமிக்ஜையாக கருதலாமா? என செய்தியாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்தமுறை முடக்கலின் பின்னர் நாட்டை திறந்தவேளை காணப்பட்டதை விட நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டு மூன்று மடங்கு அதிகமாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய நிலைமை குறித்து 100 வீதம் திருப்தியடையமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேநேரம் கடந்த முறை முடக்கலின் பின்னர் நாட்டை திறந்தவேளை காணப்பட்டதை விட நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்கு அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் மாத்திரமின்றி மக்களுக்கும் அதிக பொறுப்புணர்வுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நாட்டை மீள திறப்பதற்கான சூழ்நிலை இதுவரை இல்லை என தெரிவித்துள்ள ஹேமந்த ஹேரத், எனினும் நாடு அவ்வாறான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நோயாளர்கள் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் குறைவடைந்துள்ளதை நாட்டை மீள திறப்பதற்கான பச்சை சமிக்ஞை என நான் தெரிவிக்கவில்லை உஎன தெரிவித்துள்ள அவர், ஆனால் நாங்கள் அந்த பச்சை சமிக்ஞையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: