நாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபஷ்ச விடுத்துள்ள விசேட செய்தி!

Friday, March 20th, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று மாலை விசேட உரையாற்றியுள்ளார்.

இதன்போது, நாட்டில் வாழும் மக்கள் மற்றும் வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

நோயாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பில் அறியக்கிடைத்ததும், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே ஆயிரக்கணக்கான மக்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கான உணவு, மருத்துவ வசதிகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

எவ்வளவு அபாயமான தொற்று நோயாக இருந்தாலும், எந்தளவு சிரமங்களை எதிர்கொண்டாலும் தாம் மக்கள் சார்பில் செயற்படத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மாணவர்களின் பாதுகாப்புக் கருதி பாடசாலைகளை மூடினோம். படிப்படியாக விமானப் பயணங்களை மட்டுப்படுத்தினோம். இத்தாலியின் நிலைமை மற்றும் சர்வதேச நாடுகளின் நிலைமைகளை கருத்திற்கொண்டு படிப்படியாக தீர்மானங்களை எடுத்துள்ளோம். தற்போது நாடு பூராகவும் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகில் மிகக் கொடுமையான பயங்கரவாதம் நிலவிய காலத்தில் கூட நாடு பூராகவும் ஊரங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டி ஏற்படவில்லை. எனினும், சிலரது பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக, இன்று இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டது

என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் பல மாதங்களுக்கு போதுமான வகையில் மருந்து, உணவு , எரிபொருள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளதாகவும் தேவையற்ற வகையில் குழப்பமடைய வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

வைத்தியர்கள் கூறும் ஆலோசனைகளையும், அரசாங்கம் கூறும் ஆலோசனைகளையும் உரிய முறையில் பின்பற்றினால், மிக விரைவில் இந்த தொற்று நோயில் இருந்து மீள முடியும் என பிரதமர் நம்பிக்கை வௌியிட்டார்

Related posts: