நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு பின்நிற்கப் போவதில்லை – அரச வங்கிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள வேண்டுகோள்!

Tuesday, June 16th, 2020

நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரச வங்கிகள் நேரடியாக பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கமொன்றின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையை வகுக்க வேண்டியது அரச வங்கிகளின் பொறுப்பாகும். அதனை விளங்கி பொருளாதாரத்தை செயற்திறமாக பேணுவதற்கான மூலோபாயத்தை முன்கொண்டு செல்வது வங்கிகளின் முக்கிய பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கியின் செயலாற்றுகை மீளாய்வு தொடர்பான கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடனுக்காக 02 இலக்க வட்டியை அறவிடுவதன் மூலம் நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனை ஒரு தனி இலக்க குறைந்த பெறுமாணத்திற்கு கொண்டுவந்து அபிவிருத்திக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தனது உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அல்லது தனக்கு உதவியவர்களுக்கு கடன் வழங்குமாறு ஒருபோதும் தான் வங்கிகளுக்கு கூறவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாயிகள் முதல் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் முதலீட்டாளர்களும் எதிர்பார்க்கும் நிதி உதவிகளை வழங்குவதற்கு அரச வங்கிகள் முன்னணியில் இருக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இன்றுள்ள நிலைமைக்கு உலகின் எந்தவொரு நாடும் இதுவரையில் முகங்கொடுக்கவில்லை. இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி பழைய முறைமைகளிலிருந்து விலகி சிந்திக்க வேண்டும். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பாரம்பரிய முறைமைகளின் ஊடாக மட்டும் செய்ய முடியாதென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்கள் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி முழு நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு பின்நிற்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: