நாட்டில் மின்சார நெருக்கடியை தவிர்க்க புதிய திட்டம்!

Tuesday, September 20th, 2016

2018ஆம் ஆண்டில் மின்சக்தி நெருக்கடி ஏற்படாத வகையில் குறைந்த செலவினை கொண்ட நீண்ட கால செயற்திட்டமொன்றை மின்சார நிலையங்கள் நிறுவியுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கீழ் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் இணைந்து 2015 முதல் 2034 வரை நிறுவியுள்ள செயற்திட்டத்திலேயே 2018 ம் ஆண்டில் மின்சக்தியினால் ஏற்படக்கூடிய நெருக்கடியை எதிர்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பூர் அனல் மின் நிலையம் சுற்றாடல் ரீதியில் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததால் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ஏற்படக் கூடிய மின்சார நெருக்கடியை ஈடுசெய்யும் வகையில் இலங்கை மின்சார சபை ஏனைய மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறது.

இதேவேளை குறைந்த செலவினை அடிப்படையாகக் கொண்ட நீண்ட கால செயற்திட்டம் அடிப்படையில் எதிர்வரும் 04 ஆண்டுகளுக்குள் மேலும் 1,275 மெகா வோல்ட் மின்சாரம் பிரதான மின் உற்பத்தியுடன் இணைத்துக் கொள்ளப்பட இருப்பதாகவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.

அதனடிப்படையில் 2017 முதல் 2018 ம் ஆண்டு காலப்பகுதிக்குள் 170 மெகா வோல்ட் மின் உற்பத்தி செய்யக் கூடிய இரண்டு நிலக்கரி மின் நிலையங்களையும், 105 மெகாவோல்ட் மின் உற்பத்தி செய்யும் எரிவாயு மின் உற்பத்தி, 300 மெகா வோல்ட் மின் உற்பத்தி செய்யக்கூடிய இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையம் மற்றும் மூன்று நீர்மின் உற்பத்தி நிலையங்கள், புதுப்பிக்கத்தக்க வளங்கள் என்பவற்றை அடிப்படையாக கொண்ட மேலும் 700 மெகா வோல்ட் மின் உற்பத்தி என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை தற்போது ஆராய்ந்து வருகின்றது.

“மின்சக்தியை பாதுகாப்பதற்காக நாம் மேற்படி திட்டங்களை கையாளவுள்ளோம். இல்லாவிடில் நாம் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும்” என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க நேற்று தெரிவித்தார்.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவில் நேற்று (19) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

“இலங்கை மின்சார சபையின் 2015- ,2034 வரையான திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட போது அதன் சில நிபந்தனைகளை அரசாங்கத்தின் கொள்கைகளுடன் மீள் பரிசீலனை செய்ய வேண்டியிருப்பதனால் அங்கீகாரமளிக்கப்படாமல் உள்ளது” என்றும் அவர் கூறினார்.

அத்துடன் எதிர்வரும் 04 ஆண்டுகளுக்குள் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுடன் மின் உற்பத்தியினளவு 25 சதவீதத்தால் அதிகரித்தாலே 2018 ம் ஆண்டிற்கான மின்சக்தி நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமெனவும் அவர் கூறினார்.

இச் செயற்திட்டம் 20 வருடங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நாட்டின் நலன் கருதி பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே எமது சவாலாகும். ஏற்கனவே திட்டமிட்டபடி சம்பூர் அனல் மின் நிலையத்தை நாம் நிறுவியிருப்போமாயின் இப்போது மின்சக்தி நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிட்டிருக்காது. இருப்பினும் நீண்டகால தாமதத்திற்குப் பின்னர் சம்பூர் அனல் மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் கூட அது 2020 ஆண்டிலேயே நிறைவடையும் என்பதனால் 2018 இற்கான நெருக்கடிக்கு எமக்கு சம்பூர் மின்நிலையம் தீர்வாக அமையாது என்றும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கூறினார். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமைய சம்பூர் அனல் மின் நிலையத்துக்கு ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

electricity-energy-home-owners

Related posts: