நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதி!

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பினால் லிட்டீரோ காஸ் நிறுவனத்துக்கு ஏற்படும் நட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளபோதிலும் லாப் காஸ் நிறுவனத்துக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தாமதித்தாலே லாப் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன, நுகர்வோர் அதிகாரசபை இதுதொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
கொரோனா தொற்று காரணமாக உலக சந்தையில் அனைத்துவகையான உற்பத்திகளும் குறைவடைந்திருக்கின்றன. அதனால் பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
அதனடிப்படையில் சமையல் எரிவாயு விலையும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் உலக சந்தையில் அதிகரிக்கப்பட்டிருக்கும் எரிவாயு விலைக்கு நிகராக எமது நாட்டில் காஸ் இறக்குமதி செய்யும் லிட்ரோ மற்றும் லாப் காஸ் நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டர் ஒன்றின் விலையை 715 ரூபாவால் அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகாரசபையிடம் கோரி இருந்தன.
இருந்தபோதும் கொவிட் காரணமாக மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் நிலையில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டால் அது நுகர்வோருக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என அரசாங்கம் விலை அதிகரிப்புக்கு செல்லவில்லை.
என்றாலும் காஸ் நிறுவனங்கள் கூடிய விலைக்கு காஸை பெற்றுக்கொண்டு தற்போது இருக்கும் விலைக்கு தொடர்ந்து விநியோகிக்க முடியாது. அதற்கு மாற்றுவழி ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என கேட்டிருந்தன.
லிட்ரோ காஸ் நிறுவனம் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நிறுவனம் என்பதால் அந்த நிறுவனத்துக்கு ஏற்படும் நட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றிருக்கின்றது. அதனால் லிட்ரோ காஸ் தட்டுப்பாடு நாட்டில் இல்லை. என்றாலும் லாப் காஸ் நிறுவனத்துக்கு ஏற்படும் நட்டத்தை கட்டுப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையும் கூட்டுறவு சங்கமும் இணைந்து நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
அதுதொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வழங்காமல் இருப்பதால் லாப் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. விரைவில் அதுதொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் உலக கொவிட் காரணமாக உலகளாவிய ரீதியில் மக்கள் வாழ்வாதாரத்துடன் போராடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
எமது மக்களின் வாழ்வாதார போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களை சதொச நிறுவனம் ஊடாக நிவாரண அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
அந்தவகையில், எஸ்.எல்.எஸ். தரச்சான்றிதல் அடங்கிய முகக்கவசம் 10 ரூபாவுக்கு விற்பனை செய்யவும் ஒருசில அரிசிவகைகள் சலவை சவர்க்கார வகைகள், பிஸ்கட் போன்றவற்றை சந்தையில் விற்கப்படும் விலையைவிட குறைந்த விலைக்கு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். தேசிய உற்பத்தியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலே இதனை நாங்கள் மேற்கொள்கின்றோம் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|