நாட்டில் எந்தவித மருந்து தட்டுப்பாடும் கிடையாது – சில தரப்பினர் அரசியல் செய்ய முயற்சி என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குற்றச்சாட்டு!
Wednesday, March 16th, 2022நாட்டில் எந்தவித மருந்து தட்டுப்பாடும் கிடையாது என்றும் போதியளவு மருந்துகள் கைவசம் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் நோக்கத்துடன் நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக சில தரப்பினர் ஊடகங்கள் மூலம் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இரத்மலானை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் –
நாட்டின் மருந்து தேவையை கவனத்திற் கொள்ளும் போது கையிருப்பில் உள்ள மருந்துகள் மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள் போதியளவு காணப்படும் நிலையில் தற்போது நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட முடியாது. எனினும் மருந்தை வைத்துக்கொண்டு சில தரப்பினர் அரசியல் செய்ய முனைகின்றனர்.
ஊடகங்களில் முகங்களை காட்டுவதற்காகவும் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் சிலர் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களில் பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
சிலர் 30 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு என்றும் சிலர் 50 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு என்றும் பொய்களை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
எனினும் கைவசம் உள்ள மருந்துகள் மற்றும் தேவையான மருந்துகள் தொடர்பாக நாம் முழுமையான கவனத்தை செலுத்தி வருகின்றோம். அது தொடர்பில் நாம் தினமும் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|