நாட்டில் இனப்பிரச்சினை இல்லை – தமிழ் அரசியல்வாதிகள் மீது சரத் வீரசேகர குற்றச்சாட்டு!

Wednesday, April 5th, 2023

நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது எனவும் தமிழ் அரசியல்வாதிகளே இனப்பிரச்சினை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்களவர்களை இனப்படுகொலையாளர்கள் என சித்தரிக்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேரவாத பௌத்த கொள்கையை பாதுகாக்கும் ஒரு நாடாக இலங்கை உள்ளது, ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இனவாத முரண்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகளே தோற்றுவிக்கிறார்கள். நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார், ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று ஏதும் இல்லை.

தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகவே யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர்  புலிகள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எவ்வித இனபடுகொலையும் இடம்பெறவில்லை  என்பதை சர்வதேச  நிபுணர்கள்  உறுதிப்படுத்தியுள்ளார்கள். சிங்களவர்கள் இனபடுகொலையாளிகள் என்று பறைசாற்றுவதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: