நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக வரிக் கொள்கையில் மாற்றம் – அமைச்சர் உதய கம்மன்பில !

Friday, August 28th, 2020

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொருளாதார மறுமலர்ச்சிக்காக வரிக் கொள்கை சட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்படுமென அமைச்சர் உதய கம்மன்பில  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சமூகத்தின் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

இந்த இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றுமதி வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும். சுற்றுலாத் துறையைத் தொடங்கவும்,கட்டுமானத் துறையை புதுப்பிக்கவும், அனைத்து உணவு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வளர்க்கவும் அவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் வேண்டும்.

புதிய வரி முறை,இந்த செயல்முறையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குறைந்த வருமானம் உடையவர்கள், தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பொருளாதாரத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் முன்னோக்கிச் செல்வதற்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு தொழில்முனைவோரின் தோளில் நிதி நெருக்கடியைத் தணிக்கும் நோக்கத்தைக் கொண்ட இலங்கை மத்திய வங்கி நிதிச் சந்தையின் பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தீர்வுகளின் விளைவாக 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் 2009ஆம் ஆண்டின் ஒன்பதாம் இலக்க வரிச் சட்டம், 2006 ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டணச் சட்டம், 2011ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க துறை முகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரிச் சட்டம்,  2018ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நிதிச்சட்டம் ஆகிய சட்டங்களைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கு அமைச்சரவை  அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு வருமானச் சட்டம், 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டம் ஆகியவற்றிலும் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு முகாமைத்துவத்திற்காகத் தரவு முகாமைத்துவக் கட்டமைப்பை நிறுவுவதற்கான விலைமனுவை சிங்கப்பூரிலுள்ள நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கும் அமைச் சரவை அனுமதி வழங்கியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: