நாட்டின் பல பாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்!

Thursday, June 13th, 2019

நாட்டின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்பரப்பிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை மற்றும் அதனை அண்மித்த கடற்பரப்புகளிலும், மாத்தறை தொடக்கம் மட்டக்களப்பு வழியாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கொழும்பு – புறக்கோட்டையில் 41.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: